2015-12-30 15:58:00

இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்


டிச.30,2015. 2015ம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர்; 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்; மீதி 43 பேர், தெளிவற்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர்

என்று இவ்வமைப்பு, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 787 ஊடகவியலாளர்கள், அவர்களது பணியுடன் தொடர்புபட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

2014ம் ஆண்டு கொல்லப்பட்டவர்களில் மூன்றிலிரண்டு பேர், போர்ச் சூழல்களில் சிக்கி மரணமடைந்திருந்தனர். ஆனால், 2015ம் ஆண்டில் கொல்லப்பட்ட மூன்றிலரண்டு ஊடகவியலாளர்கள், சமாதானம் நிலவுகின்ற நாடுகள் எனத் தெரிவிக்கப்படும் நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாடுகளாக, ஈராக், சிரியா ஆகியன காணப்படுகின்றன. இரு நாடுகளிலும் முறையே 11 மற்றும், 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் 9, பிரான்ஸில் 8, யேமனில் 8, மெக்ஸிக்கோவில் 8, தென் சூடானில் 7, பிலிப்பைன்ஸில் 7, ஹொன்டூரஸில் 7 என, இந்த எண்ணிக்கை நீள்கிறது.

இந்தியாவில் கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேர், ஊடகவியல் பணிகளுக்காகக் கொல்லப்பட்டதோடு, 4 பேர், வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டுள்ளவர்கள் தவிர, 54 ஊடகவியலாளர்கள் பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர் எனவும், 153 ஊடகவியலாளர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது. 

ஆதாரம் : NewVision / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.