2015-12-30 15:03:00

அமைதி ஆர்வலர்கள் : 2004ல் நொபெல் அமைதி விருது


 “மிகக் கடினமான நேரங்களில் கூட வாய்ப்புகள் உள்ளன. என் வாழ்க்கை முழுவதும், நான் அடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை ஒருபோதும் நிறுத்தியதில்லை. நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தேன். இப்பயணம் ஒருபோதும் நிற்கவில்லை. நான் செல்லும் பயணம் என்னோடு பணியாற்றுகின்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது அதுவே எனக்கு தூண்டுதலின், சக்தியின் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாக இருந்தது...”இப்படி அருமையான பல கூற்றுக்களை உலக சமுதாயத்துக்கு விட்டுச் சென்றுள்ளவர்தான் 2004ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கு உரிமையாளர். இவர்தான் Wangari Muta Maathai. இவர் ஆப்ரிக்கக் கண்டத்தின் கென்ய நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் ஆர்வலர். கென்யாவில் Green Belt Movement என்ற பசுமை இயக்கத்தை ஆரம்பித்தவர். நொபெல் அமைதி விருதைப் பெற்ற முதல் ஆப்ரிக்கப் பெண்ணாவார். பசுமை இயக்கம்(The Green Belt Movement); அடிபணியா நிலை, சொந்த வாழ்வின் அனுபவங்கள்(Unbowed: A Memoir); ஆப்ரிக்காவுக்குச் சவால் (The Challenge for Africa); இப்பூமியின் குறையை நிவர்த்தி செய்தல்(Replenishing the Earth) ஆகிய நான்கு நூல்களை எழுதியிருப்பவர் வான்காரி மாத்தாய். இன்னும் பல நூல்களில் இவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். 2008ம் ஆண்டில் Marlboro தயாரிப்பில் வெளிவந்த Taking Root: the Vision of Wangari Maathai என்ற ஆவணப்படத்திற்கு மாத்தாய் அவர்கள்தான் கரு.

கென்யாவில் கிராமப் பகுதியில், Nyeri எனும் ஊரில் 1940ம் ஆண்டில் பிறந்த வான்காரி மாத்தாய் அவர்கள், கன்சாஸ் மாநிலத்தின் Atchisonல் புனித ஸ்கோலாஸ்திக்கா கல்லூரியில் 1964ம் ஆண்டில் உயிரியலில் பட்டயம் பெற்றார். 1966ம் ஆண்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் நைரோபியிலும் பல்கலைக்கழகங்களில் படித்து 1971ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். பேராசிரியரான மாத்தாய் அவர்கள், நைரோபி பல்கலைக்கழகத்தில் விலங்குகள் உடலியியல் துறையின் தலைவராகவும், அத்துறையில் இணைப் பேராசிரியராகவும் 1976 மற்றும் 1977ம் ஆண்டுகளில் பணியாற்றியிருக்கின்றார். கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் இந்தப் பதவிகளை வகித்த முதல் பெண், மற்றும் அப்பகுதியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இவர். கென்ய தேசிய பெண்கள் அவையில் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினராகச்(1976–1987) செயல்பட்டதோடு அந்த அவையின் தலைவராகவும்(1981–1987)  இருந்தார். பேராசிரியர் மாத்தாய் அவர்கள், கென்ய தேசிய பெண்கள் அவையில் பணியாற்றியபோது மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். GBM என்ற பசுமை இயக்கத்தின் வழியாகவும் அடித்தட்டு மக்கள் மத்தியில் இத்திட்டத்தைத் தொடர்ந்து பரப்பினார். மரம் நடுதல் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஏழ்மையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கென்யாவில் மரம் நடும் பழக்கம் தொடர்கின்றது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை கென்யாவில் மேற்கொண்ட திருத்தூப் பயணத்தில் காண முடிந்தது. திருத்தந்தையும் நைரோபி ஐ.நா.அலுவலகத்திலும், காங்கேமிச் சேரியிலும் மரக்கன்றுகளை நட்டார். கென்யாவில் சிறார் முதன்முதலில் பள்ளிக்குச் செல்வதற்கு முன் ஒரு மரக்கன்றை நடவேண்டும் என்ற பழக்கம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் மாத்தாய் அவர்கள், சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அதிகம் போராடியிருப்பவர். பல நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும் பணியாற்றியிருப்பவர். இவரின் இம்முயற்சிகள் பன்னாட்டு அளவில் இவருக்குப் புகழைப் பெற்றுக்கொடுத்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அமர்வுகளில் பல முறைகள் உரையாற்றியிருப்பவர். அதோடு பூமி உச்சி மாநாட்டின் ஐந்தாண்டு பரிசீலனையின்போது ஐ.நா. பொது அவையின் சிறப்பு அமர்வுகளில் பெண்களின் பிரதிநிதியாகவும் உரையாற்றியிருப்பவர். ஐ.நா.வின் உலகளாவிய நிர்வாக குழு மற்றும் எதிர்காலம் குறித்த குழுவிலும் பணியாற்றியிருக்கிறார் மாத்தாய்.

பேராசிரியர் மாத்தாய் அவர்கள், கென்ய மக்களவையில் Tetu தொகுதியின் சார்பில் அங்கம்(2002–2007)வகித்துள்ளார் மற்றும் கென்யாவின் ஒன்பதாவது மக்களவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறையின் உதவி அமைச்சராகவும் (2003–2007)இருந்துள்ளார். 2005ம் ஆண்டில், காங்கோ பகுதியின் 11 அரசுகளின் தலைவர்கள் மாத்தாய் அவர்களை, காங்கோ காடுகள் பகுதி சுற்றுச்சூழல் அமைப்பின் நல்மனத் தூதுவராக நியமித்தனர். 2006ம் ஆண்டில் இவர், ஜோடி வில்லியம்ஸ் Shirin Ebadi, Rigoberta Menchú Tum, Betty Williams, Mairead Corrigan ஆகிய ஆறு நொபெல் அமைதி விருது பெற்ற பெண் ஆர்வலர்களுடன் சேர்ந்து நொபெல் பெண்கள் குழு ஒன்றைத் தொடங்கினார். காங்கோ காடுகளைப் பாதுகாப்பதற்கு உதவும் நோக்கத்தில், பிரித்தானிய மற்றும் நார்வே அரசுகள் உருவாக்கிய காங்கோ காடுகள் பகுதி நிதி அமைப்புக்கு இணைத்தலைவராகச் செயலாற்றுமாறு 2007ல் இவருக்கு அழைப்பு விடுத்தன.

பேராசிரியர் மாத்தாய் அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மிக அதிக அளவில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இதனை அங்கரீகரிக்கும் விதமாக, ஐ.நா.பொதுச்செயலர், 2009ம் ஆண்டு டிசம்பரில் இவரை ஐ.நா. அமைதித் தூதுவராக நியமித்தார். காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். 2010ம் ஆண்டில், மில்லேன்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளின் (MDGs) ஆலோசனைக் குழுவுக்கும் மாத்தாய் நியமிக்கப்பட்டார். இந்த இலக்குகளை நிறைவேற்றும் நோக்கத்தில் இக்குழுவில் அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டனர். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக மாத்தாய் போராடி வந்த பொதுவான நிலத்தைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட Karura காடு சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் 2010ல் மாத்தாய் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் நைரோபி பல்கலைக்கழகத்தை உறுப்பினராகக் கொண்ட அமைதி மற்றும் சுற்றுச்சூழல் கல்விக்கென Wangari Maathai நிறுவனத்தைத்(WMI) தொடங்கினார். நிலத்தைப் பயன்படுத்தல், காடுகள், வேளாண்மை, வளங்களை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் சண்டைகள், அமைதி ஆகியவை பற்றி பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்த WMI நிறுவனம் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் மாத்தாய் 2011ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தனது 71வது வயதில் கருப்பைப் புற்றுநோயால் காலமானார். மனித உரிமைகள், மேஜைமீது வைத்து மக்கள் பார்த்து மகிழும் பொருள் அல்ல. மாறாக, போராட வேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்கள் என்று சொன்னவர் 2004ல் நொபெல் அமைதி விருது பெற்ற வாங்காரி மாத்தாய். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.