2015-12-30 15:22:00

திருத்தந்தையின் 2015ம் ஆண்டு பணியில் வெளிப்பட்ட கருத்துக்கள்


டிச.30,2015. இயற்கையின் பாதுகாப்பு மற்றும், சமாதானத்தின் நிலைப்பாடு ஆகிய இரண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2015ம் ஆண்டு பணியில் அதிகம் வெளிப்பட்ட கருத்துக்கள் என்று, இத்தாலிய ஆயர்களில் ஒருவரான மாரியோ தோசோ (Mario Toso) அவர்கள் கூறினார்.

Faenza-Modigliana மறைமாவட்டத்தின் ஆயரும், நீதி அமைதி திருப்பீட அவையின் முன்னாள் செயலருமான ஆயர் தோசோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இயற்கையின் பாதுகாப்பு என்ற திருத்தந்தையின் வேட்கையை, அவர் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் காண முடிந்தது என்று கூறினார்.

உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை விடுத்துள்ள செய்தியில், அக்கறையற்ற நிலை குறித்து பேசியிருப்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட ஆயர் தோசோ அவர்கள், அக்கறையற்ற நிலையே, இயற்கையின் அழிவுக்கும், அமைதியற்ற நிலைக்கும் காரணம் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று கூறினார்.

இயற்கை வளங்கள் நிறைந்த உலகம் என்ற வீடு, ஒரு சிலரால் சூறையாடப்படும் வேளையில், அங்கு அமைதி உருவாக வாய்ப்பில்லை என்று கூறிய ஆயர் தோசோ அவர்கள், இயற்கை வளங்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிலை வந்தால் மட்டுமே உலக அமைதி நிலவும் என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.