2015-12-30 15:00:00

இரக்கத்தின் சிறப்பு யூபிலிக்கென வெளியிடப்படும் நினைவு வில்லை


டிச.30,2015. "கடவுளின் அன்புக்கு யாராலும் எல்லை வகுக்கமுடியாது, ஏனெனில், அவர் எப்போதும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 30ம் தேதி வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக உள்ளன.

மேலும், 2016ம் ஆண்டு சனவரி 4, வருகிற திங்களன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நினைவு வில்லை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'காணாமற்போன மகன் திரும்பி வருதல்' என்ற கருத்துடன், ரெம்ப்ரான் (Rembrandt) என்ற புகழ்பெற்ற ஓவியர் வரைந்துள்ள ஓவியம் ஒருபுறத்திலும், 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி 2015' என்ற வார்த்தைகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதிகார இலச்சினையும் மறுபுறத்திலும், இந்த வில்லையில் பதிக்கப்பட்டுள்ளன.

திரும்பிவரும் மகனை வரவேற்கும் கரங்களில் ஒன்று ஆணின் கரமாகவும், மற்றொன்று பெண்ணின் கரமாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்றும், ஆணின் கரம் தந்தையாம் இறைவனைக் குறிப்பதாகவும், பெண்ணின் கரம், தாயாம் திருஅவையைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளன என்றும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

கலைப் படைப்புக்களில் பல விருதுகளைப் பெற்றுள்ள Mariangela Crisciotti என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு வில்லைகள், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.