2015-12-29 14:40:00

தங்கள் நம்பிக்கையைப் பாடும் இளம் பாடகர்கள்


டிச.29,2015. “இறைவனின் இரக்கம், எந்தப் பாவத்தையும்விட எப்போதும் பெரியது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரோம் நகரில் நடந்துவரும் நாற்பதாவது அனைத்துலக இளம் பாடகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான இளம் பாடகர்களை, டிசம்பர் 31, வருகிற வியாழனன்று வத்திக்கானில் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று வத்திக்கான் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் தொடங்கியுள்ள இந்த ஆறு நாள் மாநாடு, உங்கள் நம்பிக்கையைப் பாடுங்கள் என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.

18 நாடுகளைச் சேர்ந்த 127 பாடகர் குழுக்களின் ஏறக்குறைய ஆறாயிரம் உறுப்பினர்கள்   இதில் கலந்துகொள்கின்றனர். இந்த இளம் பாடகர்கள், இந்நாள்களில் உரோம் நகரின் அழகிய ஆலயங்களில் திருவழிபாடுகளிலும் பாடி வருகின்றனர்.

ஆலய இசையைப் புதுப்பித்தல் குறித்து திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அவர்கள் 1903ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரான்ஸ் நாட்டில் 1907ம் ஆண்டில் சிறார் பாடகர்களை வைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் வளர்ந்து வந்த இந்த அமைப்பை, 1965ம் ஆண்டில் திருப்பீடம் பக்த இயக்கமாக அங்கீகரித்தது. தற்போது இந்த அனைத்துலக இளம் பாடகர்கள் கூட்டமைப்பில், அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 35 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய நாற்பதாயிரம் இளையோர் மற்றும் சிறார் பாடகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.