2015-12-29 15:02:00

உலகளவில் சிறுபான்மையினர் மதிக்கப்பட கிறிஸ்மஸ் உதவட்டும்


டிச.29,2015. நேபாளத்தில் சிறுபான்மை மதத்தவர் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர் மதிக்கப்படுவதற்கு அரசும், அதிகாரிகளும் உறுதியளிக்க வேண்டுமென்று கிறிஸ்மஸ் திருப்பலியில் கேட்டுக்கொண்டார் நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Simick.

காட்மண்டு பேராலயத்தில் கத்தோலிக்கரும், கத்தோலிக்கர் அல்லாதவரும் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் Paul Simick அவர்கள், நேபாளத்திலும், உலகில் போர் இடம்பெறும் இடங்களிலும் அமைதிக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

நேபாளத்தில், அனைத்து சிறுபான்மை சமூகங்களும் மதிப்புடனும், மாண்புடனும் வாழ்வதற்கு அரசு அதிகாரிகளும், மூத்த அதிகாரிகளும் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் Paul Simick.

நாம் ஒருவர் ஒருவரை மதிக்கும்போது அமைதி ஏற்படுகின்றது என்றும், எந்தவொரு மனிதரின் குரலும் அமுக்கப்படக் கூடாது என்றும், நம்மிடையே முற்சார்பு எண்ணங்களே இருக்கக் கூடாது என்றும் கூறினார் நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி.

நேபாள தேசிய விடுமுறைகளில் கிறிஸ்மசும் இணைக்கப்பட்ட 2007ம் ஆண்டிலிருந்து, அந்நாட்டில் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நேபாள அரசுத்தலைவர் Bidhya Devi Bhandari அவர்களும், நாட்டிலும் வெளியிலும் வாழும் அனைத்து நேபாள கிறிஸ்தவர்க்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.