2015-12-29 15:01:00

அமெரிக்காவில் குடியேற்றதாரர்க்கு கிறிஸ்தவ சபைகள் புகலிடம்


டிச.29,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் அரசால் திருப்பி அனுப்பப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் தென் அமெரிக்க குடியேற்றதாரர்க்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள் புகலிடம் அளித்து வருகின்றன.

சரியான ஆவணங்கள் இன்றி அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் நூற்றுக்கணக்கான தென் அமெரிக்க குடியேற்றதாரக் குடும்பங்களை, வருகிற சனவரியில் நாடு கடத்தும் நோக்கத்தில் அவர்களைத் தேடும் வேட்டை மும்முரமாய் நடைபெற்று வருவதாக Washington Post தினத்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய, அரிசோனா மாநிலத்தில் Tucsonலுள்ள பிரிந்த கிறிஸ்தவ சபை போதகர் Alison Harrington அவர்கள், ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பம் என்று அறிந்திருக்கிறோம், ஆதலால் எங்களின் கதவுகளைத் திறந்திருக்கிறோம், கிறிஸ்மஸ்க்கு நாங்கள் வழங்கும் பரிசு, புகலிடமாகும் என்று கூறினார்.

கடந்த 18 மாதங்களில், நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய குறைந்தது பத்து குடியேற்றதாரர்க்கு, கிறிஸ்தவ சபைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள புகலிட இயக்கம் தஞ்சம் அளித்துள்ளது.

மேலும், அந்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தப் புகலிட இயக்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக, Church World Service சபையின் போதகர் நோயெல் ஆண்டர்சன் அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையே, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், கியூபா நாட்டு குடியேற்றதார மக்களின் நல்வாழ்வுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ChristianGlobe /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.