2015-12-28 18:40:00

விவிலியம் - காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் – பகுதி 3


கிரகோரியன் நாள்காட்டியின்படி, ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ(ச)னவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. ஆண்டின் இறுதிநாளையும் புதிய ஆண்டின் முதல் நாளையும்  நெருங்கிவந்துள்ளோம்.

முடிவுறும் இந்த 2015ம் ஆண்டை, கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நாளிதழ்களும், இணையத் தளங்களும் அலசி வருகின்றன. ஊடகங்கள் வெளியிட்டு வரும் பின்னோக்கிய அலசல்கள், இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றன. 'சே, என்ன உலகம் இது' என்று நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.

ஆனால், ஊடகங்கள் நமக்கு முன் படைக்கும் இருண்ட உலகம், உண்மையான உலகம் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் 100 நிகழ்வுகள் நடந்தால், அவற்றில் 10 நிகழ்வுகள் எதிர்மறையான, துயரமான நிகழ்வுகளாகவும், மீதி 90 நிகழ்வுகள், நேர்மறையான, நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகளாகவும் உள்ளன என்பதே எதார்த்தமான உண்மை. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும் வன்முறைகளையும் குற்றங்களையும் விறுவிறுப்பாகப் படைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு சேரத் திரட்டி நம்முன் படைக்கின்றன, நம் மனதின் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.

நம்பிக்கையைச் சிதைக்கும் ஊடகங்களின் முயற்சிகளுக்கு ஒரு மாற்றாக,  நல்லவர்களின் கூற்றுக்களும் செயல்பாடுகளும் அவ்வப்போது, ஆங்காங்கே எழுந்தவண்ணம் உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டை நிலைகுலையச் செய்த மழையிலும், வெள்ளத்திலும், ஆயிரமாயிரம் நல்ல மனிதர்கள், எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இன்றி, பணிகள் ஆற்றியது, ஊடகங்களில் அதிகம் வெளிவராத உன்னத சிகரங்கள். அச்சிகரங்களைத் தொட விருப்பமில்லாத ஊடகங்கள், அரசியல் சகதியையும், சாக்கடையையும் மட்டுமே மீண்டும், மீண்டும் காட்டின என்பதை நாம் அறிவோம். நல்லவேளை, அண்மையக் காலங்களில் பரவி, பெருகி வரும் சமூகவலைத் தளங்களின் உதவியுடன் நல்லவர்கள் செய்துவந்த உன்னத செயல்களும் நம்மை வந்தடைந்தன.

இவ்வாண்டு நிகழ்ந்த பல நல்ல நிகழ்வுகளில் ஒன்றாக, இம்மாதம் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினைத் துவக்கியுள்ளது, நமக்கு நம்பிக்கை தரும் ஒரு புகலிடமாக அமைந்துள்ளது. இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டு, 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருஅவை வரலாற்றில் புத்துணர்வையும், ஏன், சொல்லப்போனால், ஒருவகை புரட்சியையும் உருவாக்கிய 2ம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பொருத்தம்தான் என்றாலும், அந்த சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏன் இரக்கத்தின் சிறப்பு யூபிலி என்ற மையக்கருத்தை திருத்தந்தை தேர்ந்தார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இக்கேள்விக்குப் பதில் தருவதுபோல், 'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கி வைத்த மாற்றங்களைக் குறித்து, தன் ஆவணத்தில், இவ்வாறு கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் அவர்கள் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:

“கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்” என்ற கனிவானச் சொற்களுடன் திருத்தந்தை, புனித 23ம் ஜான் அவர்கள், வத்திக்கான் சங்கத்தைத் துவக்கிவைத்தார். அதே கனிவுடன், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் இவ்வாறு பேசினார்:

"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைப் பீடித்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி இரு திருத்தந்தையர், சங்கத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் கூறிய வார்த்தைகளை தன் ஆவணத்தில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை, திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

50ம் ஆண்டை, பொன்விழாவைக் குறிக்க நாம் பயன்படுத்தும் 'யூபிலி' என்ற சொல், விவிலியத்திலிருந்து வந்த சொல். 'யூபிலி' என்ற சொல், விவிலியத்தில் எவ்விதம் உருவானது என்பதையும், அந்த யூபிலியைக் கொண்டாட இஸ்ரேல் மக்களுக்குத் தரப்பட்டிருந்த வழிமுறைகளையும் அறிந்துகொள்வது பயனளிக்கும்.

இஸ்ரயேல் மக்களுக்கு 7 என்ற எண், பொருள் நிறைந்த எண். அது, முழுமையை, நிறைவைக் குறிக்கும் ஓர் எண். நிறைவை மட்டுமல்ல, ஓய்வையும் வலியுறுத்தும் ஓர் எண் அது. ஏழாவது நாள், ஒய்வு நாள் என்பதுபோல், ஏழாம் ஆண்டும் ஒய்வு ஆண்டாகக் கருதப்பட்டது. லேவியர் நூல் 25ம் பிரிவில், ஏழாம் ஆண்டைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம்:

லேவியர் 25: 1-4

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும். ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய். ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும்.

ஒவ்வோர் ஏழாம் ஆண்டும் ஒய்வு ஆண்டாக இருப்பதைப்போல், ஏழுமுறை தொடரும் ஒய்வு ஆண்டுகளுக்கு அடுத்துவரும் ஆண்டு, யூபிலி ஆண்டு என்று இறைவனால் ஒதுக்கப்பட்டுள்ளது. லேவியர் நூல் 25ம் பிரிவில் யூபிலி குறித்து நாம் வாசிப்பது இதுதான்:

லேவியர் 25: 8-12

தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.

ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு. அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம். ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது.

யூபிலி ஆண்டின் துவக்கச் செயலாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, எக்காளம் முழங்குதல். யூபிலி ஆண்டுக்கென பயன்படுத்தப்பட்ட இந்த தனிப்பட்ட எக்காள முழக்கம், ஆட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட ஊது குழலிலிருந்து ஒலிக்கப்பட்டது. ஆட்டுக் கொம்பைக் குறிக்கும் 'யோபேல்' (Yobel) அல்லது, 'யோவேல்' (Yovel) என்ற சொல்லே, 'யூபிலி' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அமைந்தது. எக்காள ஒலியுடன் துவங்கும் யூபிலி ஆண்டில், நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை வழங்குதல்; அவரவர் தங்கள் நிலப்பகுதிக்கும், இனத்தாரிடமும் திரும்புதல்; நிலத்திற்கு ஓய்வளித்தல் என்ற மூன்று கடமைகளை நிறைவேற்றுமாறு, இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆணையிடுகிறார்.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யூபிலி என்ற சொல்லும், யூபிலி ஆண்டிற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளும் யூத, மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களைத் தாண்டி, உலக சமுதாயத்தின் சிந்தனைகளில் தாக்கங்களை உருவாக்கியுள்ளன என்பதை, நாம் கடந்துவந்த மில்லென்னிய ஆண்டான, 2000மாம் ஆண்டு உணர்த்தியது. யூபிலி ஆண்டின் கடமைகள், உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள சவால்களை நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.