2015-12-28 16:07:00

குடிபெயர்ந்த கியூப மக்களுக்காக திருத்தந்தை விண்ணப்பம்


டிச.28,2015. இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், கியூபா நாட்டு குடிபெயர்ந்த மக்களின் நல்வாழ்வுக்காக அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடிக்கடி மனித வர்த்தகர்களுக்குப் பலியாகும் கியூபா நாட்டு குடிபெயர்ந்த மக்கள், தற்போது, நிக்கராகுவா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகளின் எல்லையில் இக்கட்டான சூழலில் உள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் தரை வழியாகச் செல்வதற்கு அவதிப்படும் ஏறக்குறைய ஐயாயிரம் குடிபெயர்ந்த மக்களின் பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு காணுமாறு தென் அமெரிக்க நாடுகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

கியூப கம்யூனிச நாட்டிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்பட்டுவரும் சூழலில், கியூபாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்ல முயற்சிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது, மெக்சிகோ மற்றும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்குப் பிரச்சனையாக உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாடு விமானம் வழியாக கியூப மக்களை அழைத்துச் செல்லுமாறு நிக்கராகுவா பரிந்துரைத்து வருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.