2015-12-28 16:25:00

வாரம் ஓர் அலசல் – 2015ம் ஆங்கில ஆண்டின் நிகழ்வுகள்


டிச.28,2015. நம்புங்கள் நல்லதே நடக்கும், விட்டுக்கொடுங்கள், விருப்பங்கள் நிறைவேறும், தட்டிக்கொடுங்கள், தவறுகள் குறையும், மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும். நம் வாழ்க்கைச் சதுரங்கத்தில் வகை வகையாய்க் காய்கள். அவற்றைக் கண்டபடி நகர்த்தினால் காரியம் கெட்டுவிடும். நிதானமாய் நகர்த்தினால் வெற்றி நாடிவரும் என்பார்கள். 2015ம் ஆண்டின் நம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது வெற்றிகளும் தோல்விகளும், நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் தெரிகின்றன. எனினும் இவ்வளவு மேடு பள்ளங்களைக் கடந்துவிட்டோம் என்று நினைக்கும்போது  மேலும் துணிச்சல் பிறக்கின்றது. இப்பாதைகளில் இறைவனின் அருள்கரம் உடன் இருந்ததை நினைத்து நெஞ்சத்தில் நன்றி நிறைகின்றது. எனவே புதிய 2016ம் ஆங்கில ஆண்டைக் காண புதுத்தெம்பும், நம்பிக்கையும் பிறக்கின்றது. இதுவரை என்னோடு இருந்து வழிநடத்திய இறைவன் தொடர்ந்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கை ஆழப்படுகின்றது. 2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்து, இறைவன் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வாறு இரக்கமுள்ளவராக இருக்கின்றாரோ அவ்வாறே நாமும் அடுத்திருப்பவரிடம் இரக்கம் உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுத்து வருகிறார்.

அன்பு நெஞ்சங்களே, 2015ம் ஆங்கில ஆண்டின் நிறைவு பற்றி நாம் சிந்திக்கும் இவ்வேளையில், உலக அரங்கில் பல நேர்மறையான மற்றும் எதிர்மறையான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. கல்கத்தா அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, புனிதர் என அறிவிப்பதற்கு உதவும் ஒரு புதுமையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த டிசம்பர் 18ம் தேதி ஏற்றுள்ளது, இந்தியாவுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே ஒரு மகிழ்ச்சி செய்தி. மியான்மாரில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் சுதந்திரத் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களின் கட்சியும் அமோக வெற்றி பெற்றது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலிலிருந்து கடந்த மே 29ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபாவை நீக்கியது. காலநிலை மாற்றத்தால் இந்த 2015ம் ஆண்டில் நடந்த இயற்கைப் பேரிடர்கள் பல. பிரான்சில் இந்தக் கிறிஸ்மஸ் நாளன்று, வழக்கத்துக்கு மாறாக குளிர் குறைவாக இருந்தது. தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் கடும் சூறாவளிப் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது. இப்படி பல செய்திகளைச் சொல்லலாம்.  

திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரியில் வணிகவியல் துறைத் தலைவரான பேராசிரியர் எல்.ஜே.சார்லஸ் அவர்களிடம் 2015ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிடச் சொன்னோம்.

2015ம் ஆண்டில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் நடந்துள்ள கொடுமைகளை நாம் அறிந்துள்ளோம். ஆயினும் ஐ.எஸ். அரசுக்கு எதிரான நாடுகளின் நடவடிக்கைகள் இந்நாள்களில் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அதனால் ஐ.எஸ். அரசு தொடர்ந்து தோல்வியைக் கண்டு வருகிறது என்று சொல்லப்படுகின்றது. ஈராக்கில் கடந்த மே மாதத்திலிருந்து ஐ.எஸ் அரசின் ஆக்ரமிப்பிலிருந்த Ramadi நகரை ஈராக் படைகள், இரஷ்யா மற்றும் குர்த் இனத்தவரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றியுள்ளதாக இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன. இத்திங்களன்று ஜப்பானும், தென்கொரியாவும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைவீரர்களுக்கு, இரண்டு இலட்சம் தென்கொரியப் பெண்கள் வரை, பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ஜப்பான் மன்னிப்புக் கேட்டு, அப்பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 83 இலட்சம் டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. அன்பு நெஞ்சங்களே, பிறக்கும் ஆண்டில் துன்புறும் மக்களின் துயரங்கள் விலகும் என எதிர்பார்ப்போம். நம்பிக்கை இருக்கும்வரை இலைகள் உதிர்வதில்லை. நம்பிக்கை இருக்கும்வரை நாம் தோற்பதில்லை. இறைவன் அருளை நம்பி நம் அனைவர் வாழ்விலும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.