2015-12-28 16:42:00

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்


டிச.28,2015. இலங்கையில், விசாரணைகள் எதுவும் இன்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வெலிக்கடை மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது இதனைக் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

இலங்கையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரசுத்தலைவரின் உத்தரவின் பேரில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். எந்த வழக்கு விசாரணைகளும் இன்றி சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.