2015-12-28 18:31:00

கடுகு சிறுத்தாலும் – சமநிலையான மனதில் சகலமும் நல்லதே


விவசாயி ஒருவர் பாசமாக வளர்த்துவந்த குதிரை, ஒருநாள் காணாமற் போனது. ஊர்மக்கள் விவசாயியிடம் வந்து, நடந்தது பெரும் துயரம் என்று சொன்னபோது, விவசாயி, மறுமொழியாக, “ஒருவேளை அப்படி இருக்கலாம்” என்று அமைதியாகச் சொன்னார்.

சில நாட்கள் சென்று, ஓடிப்போன குதிரை, வேறு நான்கு காட்டுக் குதிரைகளுடன் விவசாயி வீட்டிற்குத் திரும்பிவந்தது. இதைக் கண்ட ஊர் மக்கள், 'இது பெரிய அதிர்ஷ்டம்' என்றனர். அப்போதும், விவசாயி, “ஒருவேளை அப்படி இருக்கலாம்” என்று அமைதியாகச் சொன்னார்.

அடுத்தநாள், காட்டுக் குதிரை ஒன்றின் மீது ஏறி அமர முயன்ற விவசாயியின் மகனை, அக்குதிரை தூக்கி ஏறிய, அவர் கீழே விழுந்து, காலை உடைத்துக் கொண்டார். மீண்டும் ஊர் மக்கள் கூடிவந்து, நடந்தது பெரும் துயரம் என்று சொன்னபோது, விவசாயி மறுமொழியாக, “அப்படியும் இருக்கலாம்” என்று சொன்னார்.

அதற்கு அடுத்தநாள், இராணுவ வீரர்கள் ஊருக்குள் வந்து, இளையோர் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். விவசாயியின் மகன் காலுடைந்து படுத்திருந்ததால், அவரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றனர்.

அதைக் கண்ட ஊர் மக்கள், அதை 'பெரிய அதிர்ஷ்டம்' என்றனர். அப்போதும், விவசாயி, “அப்படியும் இருக்கலாம்” என்று அமைதியாகச் சொன்னார்.

ஆண்டின் இறுதி நாட்கள் இவை. கடந்த ஆண்டு முழுவதும் நடந்தவற்றைத் திருப்பிப் பார்க்கும்போது, சமநிலையான மனநிலை தேவை. சமநிலையான மனதில் சகலமும் நல்லதே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.