2015-12-26 13:52:00

திருத்தந்தை ஆற்றும் திருக்குடும்பத் திருவிழா திருப்பலி


டிச.26,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, டிசம்பர் 27, ஞாயிறன்று கொண்டாடப்படும் திருக்குடும்பத் திருவிழாவன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கென சிறப்புத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார்.

நடைபெறும் யூபிலி ஆண்டையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள பல முக்கிய நிகழ்வுகளில், குடும்பங்களின் யூபிலி தனி சிறப்பு பெற்றது என்று, திருப்பீட குடும்பங்கள் அவையின் தலைவர், பேராயர், வின்சென்சோ பாலியா அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

திருக்குடும்பத் திருவிழாவன்று, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கக் குடும்பங்கள், தாங்கள் வாழும் இடங்களுக்கு அருகேயுள்ள புனிதக் கதவுகளைக் கடந்து சென்று, திருப்பலியில் பங்கேற்குமாறு திருத்தந்தை சிறப்பாக அழைப்பு விடுத்துள்ளார் என்பதையும் பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

குடும்பங்கள் என்று குறிப்பிடும்போது, அவரவர், தங்கள் நெருங்கிய குடும்பங்களையும், உறவுகளையும் மட்டும் எண்ணிப் பார்க்காமல், அந்த வட்டத்தைக் கடந்து, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரையும் தங்கள் குடும்பம் என்று ஏற்றுக்கொள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி அழைப்பு விடுக்கிறது என்று, பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

துவங்கியுள்ள இந்த யூபிலி ஆண்டில், குடும்பத்தினர், துறவியர், இளையோர், நோயுற்றோர், குழந்தைகள் என்று பல குழுவினருக்கும், சிறப்பான நிகழ்வுகளும், வழிபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.