2015-12-26 13:42:00

மன்னிப்பைப் பெறுபவருக்கு, மன்னிக்கும் கடமையுண்டு


டிச.,26,2015. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து அடுத்த நாளே கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சி புனித ஸ்தேவானின் திருவிழா சிறப்பிக்கப்படுவது, கிறிஸ்துவுக்காக, அவரின் சீடர் தன் உயிரையே வழங்கியதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் திருவிழாவையொட்டி இச்சனிக்கிழமை நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேற்று மண்ணில் பிறந்த இயேசுவுக்கான சாட்சி இன்று விண்ணில் பிறந்துள்ளார் என்றார்.

இயேசுவைப்போல் இந்தப் புனிதரும் தன்னை கொல்ல வந்தவர்களுக்காக செபிப்பதுடன், அவர்களை மன்னிக்கிறார். தன் பகையாளிகளுக்காக செபிப்பதுடன், அவர்களை அன்புகூர்பவராகவும், தன் வாழ்வையேக் கையளிப்பவராகவும், காட்டப்படுகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஸ்தேவான் கொல்லப்பட்ட நிகழ்வில், நாம் சவுலையும் காண்கிறோம், இந்த சவுலே பின்னர் பவுலாக மாறியவர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை,  புனித ஸ்தேவானின் மன்னிப்பைப் பெற்ற பெரும் புனிதர் பவுல், இறைவனின் அருளாலும், ஸ்தேவானின் மன்னிப்பாலும் மனமாற்றத்தின் வித்துக்களை தன் உள்ளத்தில் ஏற்றார் என கூறமுடியும் என்றார்.

நாமும் இறைவனின் மன்னிப்பில் புதுப்பிறப்பெடுக்கிறோம் என்ற திருத்தந்தை, திருமுழுக்கின்போது மட்டுமல்ல, ஒவ்வொருமுறை நாம் இறைவனின் பாவ மன்னிப்பைப் பெறும்போதும், நம் இதயம் புதிதாகப் பிறக்கின்றது எனவும் கூறினார்.

இறைவனின் மன்னிப்பைப் பெறும் நாம், மற்றவர்களை மன்னிக்கும் கடமையைப் பெற்றுள்ளோம் என்பதையும், நண்பகல் மூவேளை செப உரையில் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.