2015-12-26 13:58:00

புலம்பெயர்ந்தோருடன் கிறிஸ்மஸைச் சிறப்பித்த திருப்பீட செயலர்


டிச.,26,2015. உரோம் நகரில் வாழும் புலம்பெயர்ந்த ஏழை மக்களுடன் இணைந்து சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பில், கிறிஸ்மஸ் மதிய விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியத்ரோ பரோலின்.

புலம்பெயர்ந்த மக்களுடன் உணவருந்திய திருப்பீடச் செயலர், பின்னர், அங்கு புகலிடம் தேடியுள்ள ஏறத்தாழ 600 ஏழைகளையும் சந்தித்து, தன் ஆறுதலையும் வழங்கினார்.

அவர்களுக்கு உரை ஒன்றும் நிகழ்த்திய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் அருகாமையை தான் அம்மக்களுக்குக் கொணர்ந்துள்ளதாகவும், புலம்பெயர்ந்துள்ள அம்மக்களின் சொந்த நாடுகளுக்காக செபிப்பதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதற்கு இந்த விருந்து ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததாகவும் கூறினார்.

ஒரே கடவுளின் குழந்தைகளாக இருக்கும் நாம், நமக்குள் உடன்பிறந்த உணர்வுடன் வாழ்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், உடன்பிறந்த உணர்வு நம் வாழ்வில் தொடரட்டும் என்றார்.

பிறரன்புப் பணிகளிலும், அமைதிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க உதவி நிறுவனமான சான் எஜிதியோ அமைப்பு, இத்தாலியின் பல்வேறு நகர்களில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு தினசரி உணவு, தங்குமிடம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

உலகின் 650 நகர்களில், 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவி வருகிறது, எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு. 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.