2015-12-26 13:47:00

டிசம்பர் 25, 26 தேதிகளில் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர்


டிச.26,2015. 'கிறிஸ்து உங்கள் நண்பராய் இருக்கும்போது, நீங்கள் ஆனந்தம், நிறையமைதி மற்றும் மகிழ்வைப் பெறுகிறீர்கள்' என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று வெளியிட்டார்.

அப்பெருவிழாவின் மதியம், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து திருத்தந்தை அவர்கள் வழங்கிய, 'உர்பி எத் ஓர்பி', அதாவது, 'ஊருக்கும், உலகுக்கும்' என்ற சிறப்புச் செய்தியில் துன்புறும் கிறிஸ்தவர்களைக் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அதே எண்ணத்தை, இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் செய்தியாக வழங்கியுள்ளார்.

திருஅவையின் முதல் மறைசாட்சியாகப் போற்றப்படும் புனித ஸ்தேவான் திருநாளன்று, வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பல தருணங்களில் பெரும்பான்மையானோர் வெட்கத்திற்குரிய மௌனம் காப்பதால், பெரும் வன்முறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்காக மன்றாடுவோம்' என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இலத்தீன், இத்தாலியம், இச்பானியம், ஆங்கிலம், பிரெஞ்ச், அரேபியம், ஜெர்மானியம், போலந்து, மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகளை, 82,20,000 பேர் ஆர்வமாகத் தொடர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, டிசம்பர் 24, 25 ஆகிய இரு நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்திகளை 24,000 மற்றும் 29,000 பேர் விரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.