2015-12-26 14:04:00

கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அறிவிக்கும் கடவுள் இரக்கமுள்ளவர்


டிச.26,2015. இரக்கம் கடவுளுக்குரிய பண்பு, நாம் ஒருவர் ஒருவரிடம் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார், முஸ்லிமாகிய நான், எனது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர் என்பதை ஏற்கிறேன் என்று இந்திய முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் கூறினார்.

இம்மாதம் 8ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, இந்திய அரசின் சிறுபான்மை மொழிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் Akhtarul Wasey அவர்கள் இவ்வாறு கூறினார்.

"மிகவும் தாராளமிக்க, மிகவும் இரக்கமுள்ள கடவுள் பெயரால் (Bismi llahi-ar-Rahmani ar-Rahimi)" என்று தொடங்கும்  இஸ்லாமியச் செபத்தை, குறிப்பிட்டுப் பேசிய பேராசிரியர் வாசி அவர்கள், முஸ்லிம்கள், தங்களோடு வாழும் மனிதர்களிடம் இரக்கமுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டுமென்பதை இச்செபம் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.

ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த பேராசிரியர் வாசி அவர்கள், நமக்கு அடுத்திருப்பவரின் வாழும் நிலைகளை மேம்படுத்த, நன்மனம் கொண்ட மனிதர்கள், கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து செயலாற்றுவர் என்றும் கூறினார்.

இரக்கம், திருஅவை வாழ்வின் அடித்தளம் என்றும், அனைத்து திருத்தூதுப் பணிகளும் இரக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைய வேண்டுமென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் திருமுகம் (Misericordiae vultus) என்ற அறிவுரைத் தொகுப்பில் எழுதியுள்ளதை நான் அறிந்துள்ளேன் என்றும் கூறினார் பேராசிரியர் வாசி. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.