2015-12-25 14:03:00

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் திருத்தந்தையின் மறையுரை


டிச.25,2015. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் டிசம்பர் 24, இரவு, 9.30 மணிக்கு ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்து பிறப்பின் வழியே, 'பேரொளி' (எசாயா 9:1) நம்மைச் சூழ்ந்து ஒளிர்கிறது. 'அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்' (9:2) என்று நாம் கேட்டது, எவ்வளவு பொருத்தமாக உள்ளது! நமது மகிழ்வு உண்மையிலேயே கடவுளிடமிருந்து வருகிறது. இங்கு சந்தேகத்திற்கு இடமே இல்லை. காரண காரியங்களுக்கு மட்டுமே வாழ்வில் இடம் தருபவர்களுக்கு, சந்தேக உணர்வுகளை விட்டுவிடுவோம். எதையாவது இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் அன்பு செய்ய மறுக்கும் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் அக்கறையில்லா உணர்வை, அவர்களிடமே விட்டுவிடுவோம்.

இன்று இறைமகன் பிறந்துள்ளார், அனைத்தும் மாறுகின்றது. இவ்வுலகின் மீட்பர் நமது மனித இயல்பில் பங்கேற்க வருவதால், நாம் இனி ஆதரவற்றவர்களாய் விடப்படமாட்டோம். ஒரு புதுவாழ்வைத் துவங்குவதற்கு, கன்னி மரியா தன் மகனை நம்மிடம் கையளிக்கிறார். இன்று நமது பயணத்தின் முடிவை அடைவதற்கு வழி காட்டப்பட்டுள்ளது. 'அமைதியின் இளவரசரை' அனைத்துலகமும் அறியச் செய்யும் பணியை ஆற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

குழந்தை இயேசுவை நம் கரங்களில் ஏந்தி, அவரது அணைப்பில் மகிழ்வோம். அவருக்கு முன் மௌனம் காத்து, அவர் சொல்வதைக் கேட்போம். நம் வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உண்மைகளை இக்குழந்தை நமக்குச் சொல்லித் தருகிறார். எளிய மனம் கொண்ட ஒவ்வொரு மனிதருக்கும், உண்மையான விடுதலையும், மீட்பும் உண்டு என்பதை, அவர் சொல்லித் தருகிறார்.

உலகமனைத்தையும் நுகர்வுப் பொருளாக நோக்கும் மனநிலை, தன்னில் தானே நிறைவு காணும் நிலை, செல்வம், ஆடம்பரம் என்று வாழும் இன்றைய சமுதாயத்தில், உண்மையானத் தேவைகளை உணர்ந்து, எளிமையாக வாழும் வழிகளைச் சொல்லித் தருகிறார், இந்த தெய்வீகக் குழந்தை. பாவங்களைப் பலுகிப் பெருகச் செய்துவிட்டு, பாவிகளை இரக்கமின்றி தண்டிக்கும் இவ்வுலகில், இறைவனின் உள்ளத்தை அறியவும், உண்மையான நீதி என்ன என்பதைக் கண்டுணரவும் வேண்டும். அக்கறையற்ற கலாச்சாரத்தின் நடுவே, பரிவுடன், இரக்கத்துடன் வாழும் பக்குவம் பெறவேண்டும்.

பெத்லகேம் இடையர்களைப் போல், இறை மகனைக் கண்டு நாமும், வியப்பாலும், மகிழ்வாலும் நிறைவோமாக! அவரது பிரசன்னத்தில், "ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்" (தி.பா. 85: 7) என்ற மன்றாட்டு நம் மனங்களிலிருந்து வெடித்து வெளியேறட்டும்!ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.