2015-12-24 13:00:00

தண்ணீரிலும், கண்ணீரிலும் நனைந்துள்ள கிறிஸ்மஸ்


2015ம் ஆண்டு நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, தனி சிறப்பு பெற்றது. இரக்கத்தின் யூபிலி ஆண்டில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் இது என்பதே, அதன் தனிச் சிறப்பு.

இவ்வாண்டு நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய அனைத்துத் திருநாள்களையும், அவற்றின் வழக்கமான ஆடம்பரங்களிலிருந்து ஓரளவு கழுவி சுத்தம் செய்துள்ளன, மழை நீரும், மனிதரின் கண்ணீரும்.

வேதனையில் வடியும் மனிதக் கண்ணீரை, மகிழ்ச்சிக் கண்ணீராக மாற்ற, இந்த விழாக்கள் நமக்கு உதவட்டும்.

சொந்த வீட்டில் பிறக்க முடியாமல், வேற்றூரில், அன்னியர் நடுவில் பிறந்தவர், குழந்தை இயேசு. பிறந்த சில நாட்களிலேயே எகிப்து நாட்டுக்குத் தூக்கிச்  செல்லப்பட்டார், குழந்தை இயேசு. இவ்வாண்டு, செப்டம்பர் 2ம் தேதி, ஒரு சடலமாக துருக்கி நாட்டு கரையில் ஒதுங்கியிருந்த 3 வயது சிறுவன், அய்லன் குர்தி, குழந்தை இயேசுவின் இன்றைய உருவமாக நம் மனங்களில் பதிந்துள்ளார்.

இயற்கை சீற்றத்தால் வெள்ளம் சூழ்ந்த மக்களும், இதயமற்ற கலவரங்களால் இரத்த வெள்ளம் சூழ்ந்த புலம் பெயர்ந்த மக்களும் நம் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பொருள் தருவார்களாக!








All the contents on this site are copyrighted ©.