2015-12-23 16:40:00

கிறிஸ்மஸ், சக்திவாய்ந்த, புரட்சி விழா - கர்தினால் கிரேசியஸ்


டிச.23,2015. கிறிஸ்மஸ் விழா, கடவுளின் கருணையால் நமக்குக் கிடைத்த ஒரு பரிசு என்றும், இது சக்தி வாய்ந்த, புரட்சிகரமான விழா என்றும், மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் அண்மையில் வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, மும்பையின் பாண்ட்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலமான மலை மாதா பசிலிக்காவின் புனிதக் கதவை கர்தினால் கிரேசியஸ் அவர்கள் திறந்துவைத்து, நிறைவேற்றியத் திருப்பலியில், கிறிஸ்மஸ் விழா என்ற பரிசைப் பெறும் நாம், அதனை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இறை இரக்கத்தின் பக்தியை உலகெங்கும் பரவச் செய்த திருத்தந்தை புனித 2ம் ஜான் பால், இறை இரக்கத் திருநாளின் ஆழத்தை தன் வார்த்தைகளால் உணர்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும், இறை இரக்கத்தைப் பெற நம் மனங்களைத் திறந்து, அதை பிறரோடு பகிர்ந்துகொள்வதை தன் தலைமைப் பணியின் மையமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரைக் குறித்து, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இறை அன்பின் ஆழமான வடிவம், அவர் காட்டும் இரக்கம் என்றும், இதை, அன்னை மரியா பாடிய புகழ் பாடல் மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.