2015-12-23 16:41:00

தீவிரவாதிகளுக்கு கென்யாவில் வாழும் இஸ்லாமியரின் ஆதரவு இல்லை


டிச.23,2015. கென்யாவில் வாழும் இஸ்லாமியர், வன்முறைக்கு எதிரானவர்கள் என்பதை, அண்மையில், எல்வாக் (Elwak) என்ற நகரில் நடந்த நிகழ்வு ஆணித்தரமாகக் கூறுகிறது என்று, கென்யா நாட்டு, Garissa மறைமாவட்டத்தின் ஆயர், ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 21, இத்திங்களன்று கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து மன்டேரா என்ற ஊரை நோக்கிச் சென்ற ஒரு பேருந்தை, சோமாலி ஷபாப் என்ற தீவிரவாதக் கும்பல் சூழ்ந்தபோது, பேருந்தில் இருந்த இஸ்லாமியர், கிறிஸ்தவர்களோடு இணைந்து நின்று, 'கொல்வதானால் எங்கள் அனைவரையும் கொல்லுங்கள்' என்று கூறினர். இதனால், அத்தீவிரவாத கும்பல் யாரையும் கொல்லாமல் அவ்விடம் விட்டு அகன்றனர் என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதைக் குறித்து, Fides செய்திக்கு அளித்த பேட்டியில் தன் கருத்துக்களை வழங்கிய Garissa ஆயர், அலெக்சாண்டர் அவர்கள், கிறிஸ்தவர்களோடு இணைந்து நின்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, சோமாலி ஷபாப்  தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியரின் ஆதரவு இல்லை என்பதை இந்த நிகழ்வு தெளிவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு, நவம்பர் 22ம் தேதி, சோமாலி ஷபாப்  தீவிரவாதிகள், ஒரு பேருந்தில் இருந்த இஸ்லாமியரைப் பிரித்து அனுப்பிவிட்டு, மீதமிருந்த 22 கிறிஸ்தவர்களைக் கொன்றனர் என்பதையும், அதே ஆண்டு, டிசம்பர் முதல் தேதி, கல்லுடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 36 கிறிஸ்தவர் கொல்லப்பட்டதையும் Fides செய்தி குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு, ஏப்ரல் 3ம் தேதி, வடகிழக்கு கென்யாவின் Garissa பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 147 பேர் கொல்லப்பட்டனர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையானவர் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.