2015-12-23 16:47:00

திருப்பலி, மக்களைப் பிரிப்பதாக மாறக்கூடாது- கர்தினால் தாக்லே


டிச.23,2015. பிலிப்பைன்ஸ் நாட்டில் நெருங்கிவரும் தேர்தல்களையொட்டி, கட்சி வேட்பாளர்கள் நடத்தும் கூட்டங்களில், அருள் பணியாளர்கள் திருப்பலி நிறைவேற்ற அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அருள் பணியாளர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருப்பலி என்பது, விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் ஓர் உன்னதத் திருவிருந்து என்றும், எக்காரணம் கொண்டும் இந்த உன்னத பலியை, மக்களைப் பிரிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் தன் அருள் பணியாளருக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று UCAN  செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

தலத்திருஅவையின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுநிலைப் பணியாளர்கள், தேர்தல் வேட்பாளர்களாக போட்டியிட தீர்மானிப்பதை வரவேற்கும் கர்தினால் தாக்லே அவர்கள், அவ்விதம் முடிவெடுக்கும் பொதுநிலையினர், தங்கள் திருஅவைப் பணிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நடைபெறவிருக்கும் தேர்தல் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு தருணமாக இருக்கவேண்டுமே தவிர, மக்களைப் பிரித்து, வன்முறைகளை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாது என்று, கர்தினால் தாக்லே அவர்களின் மடல் வலியுறுத்துகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.