2015-12-23 15:29:00

இந்தோனேசிய அரசுத்தலைவரின் வத்திக்கான் பயணம் பயனளிக்கும்


டிச.23,2015. இந்தோனேசிய அரசுத்தலைவர் Jokowi Widodo அவர்கள் வத்திக்கானுக்குச் சென்று திருஅவைத் தலைவர்களைச் சந்திப்பது, கிறிஸ்தவ-இஸ்லாமிய உரையாடலுக்கு நல்ல பலனளிக்கும் என்று அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் ஒருவர் கூறினார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அரசுத்தலைவர் Jokowi அவர்களைச் சந்தித்து நல்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அரசுத்தலைவர் Jokowi அவர்கள் ஐரோப்பாவுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணத் திட்டத்தில் வத்திக்கானுக்குச் செல்வதையும் இணைக்குமாறு இச்சந்திப்பில் கேட்டுக்கொண்ட கிறிஸ்தவத் தலைவர்கள், அரசுத்தலைவர் Jokowi அவர்கள் வத்திக்கானைப் பார்வையிடுவது, ஐரோப்பியத் தலைவர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும் என்றும் கூறினர்.

உலகில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டுத் தலைவர், கத்தோலிக்க விசுவாசத்தின் மையத்திற்குச் செல்வது, அகில உலகால் அதிகம் பாராட்டப்பட்டு வரவேற்கப்படும் என்று, இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Suharyo Ignatius அவர்கள் தெரிவித்தார்.

ஜகார்த்தா பேராயர் Ignatius அவர்கள் தலைமையில் சென்ற கிறிஸ்தவத் தலைவர்கள், அரசுத்தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.