2015-12-23 15:40:00

அமைதி ஆர்வலர்கள் : 2003ல் நொபெல் அமைதி விருது


டிச.23,2015. ஈரான் நாட்டு வழக்கறிஞரும், முன்னாள் நீதிபதியுமான சிரின் இபாதி  அவர்கள் (Širin Ebādi), சனநாயகம், மனித உரிமைகள், குறிப்பாக, பெண்கள், சிறாரின் மனித உரிமைகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை ஊக்குவிப்பதற்கு எடுத்த துணிச்சலான முயற்சிகளைப் பாராட்டி அவருக்கு 2003ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அச்சமயத்தில், சிரின் இபாதி அவர்கள், ஈரானிலிருந்து இவ்விருதைப் பெற்ற முதல் மனிதர் மற்றும் முஸ்லிம் பெண்களில் இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். மனித உரிமை மீறல்களைக் கண்டித்து இவர் வெளிப்படையாகப் பேசிய விமர்சனங்களால், குறிப்பாக, 2009ம் ஆண்டு ஜூனில் இடம்பெற்ற ஈரான் அரசுத்தலைவர் தேர்தலை விமர்சித்ததால், ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் பழமைவாத மதக் குருக்களின் எதிர்ப்பை அடிக்கடி எதிர்கொண்டார். தெஹ்ரான் புத்தெழுச்சி நீதிமன்றத்தின் ஆணையின்பேரில், தனது நொபெல் அமைதி விருதுப் பதக்கமும், சான்றிதழும் தனது வங்கி காப்பகப் பெட்டியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்றும், இந்த நொபெல் விருதுத் தொகை 13 இலட்சம் டாலர் கொண்டது, எனவே நான்கு இலட்சத்து பத்தாயிரம் டாலர் வரி கட்டவேண்டுமென்று வலியுறுத்தி, தனது வங்கிக் கணக்கையும் நீதிமன்றம் முடக்கியது என்றும், சிரின் இபாதி அவர்கள் 2009ம் ஆண்டு நவம்பரில் இலண்டனில் இருந்தபோது நிகழ்ந்ததாக சொல்லியிருக்கிறார். இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நார்வே நொபெல் கழகம், அச்சமயத்தில் மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ ச்சி அவர்களுக்கு நடப்பதோடு சிரின் இபாதி அவர்களுக்கு நடப்பதை ஒப்பிட்டுப் பேசியது. நொபெல் அமைதி விருது வரலாற்றில், ஒரு நாட்டின் அதிகாரிகளால் இவ்விருது பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்றும் நார்வே கழகம் கூறியது. எனினும் இக்குற்றச்சாட்டை பின்னாளில் ஈரான் அரசு மறுத்தது. இக்குற்றச்சாட்டு உண்மையாய் இருப்பின், நொபெல் விருது, அரசு அதிகாரிகளால் கட்டாயமாகப் பறிக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது இருக்கும் என்று ஊடகங்கள் கூறின.

ஈரான் அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அதிகரித்ததையடுத்து 2009ம் ஆண்டு ஜூன் முதல் பிரித்தானியாவில் வாழத் தொடங்கினார் சிரின் இபாதி. இவர், “ஈரானில் மனித உரிமைகளைக் காக்க முயற்சிக்கும் எவரும் பிறப்பு முதல் இறப்புவரை அச்சத்தோடு வாழ வேண்டும், ஆனால் நான் அந்தப் பயத்தை வெற்றி காணக் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறியிருப்பவர். 2003ல் நொபெல் அமைதி விருது பெற்ற பின்னர், இவரை ஈரான் அரசு கைது செய்யாமல் இருந்தாலும், இவரோடு நெருங்கிப் பணிசெய்யும் பலர் அரசால் குறி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 2001ம் ஆண்டில் தெஹ்ரானில் இவர் நிறுவிய மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர். இம்மையம், ஈரானில் பெரிய அரசு-சாரா மையமாக இயங்கி வந்தது. 2004ம் ஆண்டில் Forbes இதழ், உலகில் மிகவும் சக்திவாய்ந்த நூறு பெண்களின் பட்டியலில் இவரை ஒருவராக இணைத்தது. அதோடு, எல்லாக் காலத்துக்கும் மிகவும் நேர்மறைத் தாக்கம் செலுத்தும் நூறு பெண்களின் பட்டியலில் இவரை இணைத்து வெளியிட்டது. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றியிருப்பதோடு பல நாடுகளிடமிருந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் இவர். 1947ம் ஆண்டில் ஈரானின் Hamadanல் பிறந்த இபாதியின் தந்தை முகமது அலி இபாதி அவர்கள், அந்நகரின் தலைமைப் பதிவாளராகவும், வணிகச் சட்டயியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவர்களின் குடும்பம் 1948ம் ஆண்டில் தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்தது.  

சிரின் இபாதி அவர்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் 1969ம் ஆண்டில் சட்டம் பயின்று 1970ம் ஆண்டில் நீதிபதியாகத் தனது பணியைத் தொடங்கினார். ஐந்தாண்டுகளுக்குள்(1975) தெஹ்ரான் நகர நீதிமன்றத்தின் தலைவரானார். ஈரான் வரலாற்றில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர். 1979ம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், பெண்கள், நீதிபதி பதவியில் இருப்பதை இஸ்லாம் தடைசெய்கின்றது என்று மதக் குருக்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே அப்போது ஆட்சிக்கு வந்த ஈரான் அரசின் கோட்பாட்டால், சிரின் இபாதி அவர்களும், மற்ற பெண் நீதிபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது கட்டாயத்தின்பேரில் பதவி விலகினர். இபாதி அவர்களுக்கு செயலர் பதவி வழங்கப்பட்டது. ஆயினும், பெண் நீதிபதிகள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதலால் சட்ட நிபுணர் என்ற உயர் பதவி பெண் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் குறித்த இவ்விடயத்தில் நாட்டின் கோட்பாட்டில் மாற்றம் ஏற்படாததால், ஓய்வு வயதுக்கு முன்னரே சிரின் இபாதி அவர்கள் பணி ஓய்வுக்கு விண்ணப்பித்தார். இவ்விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு வரை,   சிரின் இபாதி அவர்களால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. இக்காலத்தில் பல புத்தகங்களையும், ஈரான் இதழ்களில் பல கட்டுரைகளையும் எழுதி வந்தார். இவர் தற்போது தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் சட்டயியல் துறையில் பேராசிரியராகவும், பெண்கள் மற்றும் சிறாரின் சட்ட முறைப்படியான நிலைமையை உறுதிப்படுத்துவதில் நடவடிக்கை எடுப்பவராகவும் பணியாற்றி வருகிறார்.

சிரின் இபாதி அவர்கள், நாட்டின் நீதி அமைப்புக்குப் பலியாகும் ஆர்வலர்களுக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞராக அறியப்படுகிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்காகச் சிறைத் தண்டனையையும் இவர் அனுபவித்திருக்கின்றார். சிறார் உரிமை பாதுகாப்பு கழகம்(SPRC), மனித உரிமைகள் பாதுகாப்பாளர் மையம்(DHRC) ஆகிய இரு அரசு-சாரா நிறுவனங்களை, மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியுடன் ஈரானில் இவர் நிறுவியிருக்கிறார். 2002ம் ஆண்டில் ஈரான் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சிறாரை உடலளவில் துன்புறுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை எழுதுவதற்கு இவர் உதவியிருக்கிறார். “நல்லிணக்கத்தில், சமத்துவம் மற்றும் சனநாயகத்தோடு இஸ்லாமுக்கு விளக்கமளிப்பதே, இஸ்லாம் மத விசுவாசத்தை உண்மையான முறையில் வெளிப்படுத்துவதாகும். இஸ்லாம், பெண்களைக் கட்டுக்கோப்புக்குள் வைப்பதல்ல, ஆனால் பெண்களை நான்கு சுவர்களுக்குள் வைக்க விரும்பும் சிலரே பெண்களை இப்படி வைத்திருக்கின்றனர்” என்று கடந்த 23 ஆண்டுகளாக சிரின் இபாதி அவர்கள் சொல்லி வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. ஈரானுக்குள் அமைதியான முறையில் மாற்றம் வரவேண்டுமென்று விரும்பும் இவர், ஈரான்மீது மிகுந்த அன்பு கொண்டவர். மேற்குலகை ஒரு விமர்சனப் பார்வையோடு நோக்குபவர். ஈரான் விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை வெளிப்படையாகப் புறக்கணிப்பவர் சிரின் இபாதி. 2003ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது தவிர, மனித உரிமை விருதுகள், பல பல்கலைக்கழகங்களிடமிருந்து கவுரவ முனைவர் பட்டங்களையும் பெற்றிருப்பவர் இபாதி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.