2015-12-22 14:42:00

கிறிஸ்மஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடுங்கள், மதுரை பேராயர்


டிச.22,2015. தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாடுமாறு மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், கிறிஸ்மஸ் என்பது, கொடுப்பதும், அக்கறை காட்டுவதுமாகும், எனவே, இவ்வாண்டு கிறிஸ்மஸ், கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடன் இணைந்து கொண்டாடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பொருள் உள்ளதாக இருக்கும் என்றும் மதுரை பேராயரின் அறிக்கை கூறுகிறது.

தமிழக கத்தோலிக்கத் திருஅவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவி வருகின்றது என்றும் பேராயர் அந்தோணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை, கடலுார், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான மக்கள், வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் வகையில், மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள 69 பங்குகளைச் சேர்ந்த மக்களுக்கு தெரிவித்தோம். இதை ஏற்று ஏராளமானோர் பணம், பொருளுதவி அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வுதவிகளை நேரடியாக வழங்கி வருகிறோம். பிரச்சனைகளைக் களைந்து தீர்வு காண்பதில் அக்கறை காட்டி வருகிறோம். கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.