2015-12-22 14:45:00

கடுகு சிறுத்தாலும்... உண்மை நண்பர்முன் கவசம் தேவையில்லை...


7வது வகுப்பு படித்துவந்த நிக்கி என்ற சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டது. ‘கீமோதெரப்பி’ (‘Chemotherapy') எனப்படும் கதிர்வீச்சு மருத்துவத்திற்கு உட்பட்ட நிக்கி, தன் தலைமுடி அனைத்தையும் இழந்தாள். அவள் பள்ளிக்குத் திரும்பியபோது, ஏனைய மாணவ, மாணவியர், நிக்கி அணிந்துவந்த ஒட்டுமுடி கவசத்தை (wig) அடிக்கடி இழுத்து, கேலிசெய்தனர். அவளது நண்பர்கள் அவளைவிட்டு விலகினர். ஒவ்வொருநாளும் நிக்கி வீட்டுக்குத் திரும்பியதும் அழுதாள். நிக்கி பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை என்று, அவளது பெற்றோர் ஆறுதல் கூறினர்.

அத்தருணத்தில், நிக்கி மற்றொரு சிறுவனைப் பற்றி கேள்விப்பட்டாள். அச்சிறுவன் பள்ளிக்கு விவிலியத்தை எடுத்துச் சென்றபோது, பள்ளியிலிருந்த பலர் அவனைக் கேலி செய்தனர். அச்சிறுவனோ, தன்னைக் கேலிசெய்த ஒரு மாணவனை வழிமறித்து, அவன் கையில் விவிலியத்தைக் கொடுத்தான். "நான் உனக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இன்று முழுவதும் நீ இந்த விவிலியத்தை பள்ளியில் உன்னோடு எடுத்துச்செல், பார்க்கலாம்" என்று சவால் விடுத்தான். அன்று முதல், அச்சிறுவனைக் கேலி செய்தவர்கள், அவனுடைய நண்பர்கள் ஆயினர். இக்கதையைக் கேட்ட சிறுமி நிக்கி, தனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

அடுத்தநாள், நிக்கி தன் பெற்றோருடன் பள்ளிக்குச் சென்றாள். காரைவிட்டு இறங்கியதும், தன் பெற்றோரிடம், "இன்று என் உண்மையான நண்பர்கள் யார் என்று கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று சொன்னாள். பின்னர், தான் அணிந்திருந்த ஒட்டுமுடி கவசத்தைக் கழற்றி காரில் வைத்துவிட்டு, புன்முறுவலுடன் பள்ளிக்குள் நுழைந்தாள் நிக்கி. அன்று முதல் நிக்கியை யாரும் கேலி செய்யவில்லை.

உள்ளத்தின் உறுதி, உண்மை நண்பர்களை உருவாக்கும். உண்மை நண்பர்கள் நடுவே, கவசங்கள் தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.