2015-12-22 14:54:00

விவிலியத்தேடல் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் – பகுதி 2


2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக, கத்தோலிக்கத் திருஅவையில் 2000மாம் ஆண்டு, யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டது. திருஅவை வரலாற்றில், 1300ம் ஆண்டு வரை, யூபிலி கொண்டாட்டங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. 1300ம் ஆண்டு, திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், அந்த ஆண்டை, ஒரு புனித ஆண்டாக அறிவித்தார்.

புனித ஆண்டை அறிவிக்கும் எண்ணம், திருத்தந்தையிடமிருந்தோ, அல்லது வேறு மதத் தலைவர்களிடமிருந்தோ உருவானதாகத் தெரியவில்லை. மக்கள் காட்டிய விசுவாச உணர்வே, இந்த அறிவிப்பை, திருத்தந்தையிடமிருந்து வரவழைத்தது. மக்களின் விசுவாசமே, யூபிலி ஆண்டுகள் உருவாகக் காரணமாக இருந்தததென்பது, யூபிலி ஆண்டு வரலாற்றிற்கு ஓர் உன்னத அடித்தளத்தை அமைக்கிறது.

13ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலகின் பல பகுதிகளில் போர்கள் நிகழ்ந்துவந்தன. கொள்ளை நோய்களும் மக்களை வாட்டி வதைத்தன. எனவே, பல கிறிஸ்தவர்கள், இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் தேடி, திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் ஆகிய இருவரின் கல்லறைகளில் கூடி, செபிக்கத் தீர்மானித்தனர். தங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற, அவர்கள் உரோம் நகர் நோக்கி, திருப்பயணம் மேற்கொண்டனர். ஒரு சிலரது முயற்சியெனத் துவங்கிய இத்திருப் பயணத்தில் வழியெங்கும் ஆயிரமாயிரமாக கிறிஸ்தவர்கள் இணைந்தனர். அவர்கள் அனைவரும் 1299ம் ஆண்டு, கிறிஸ்மஸ் விழாவன்று உரோம் நகரை அடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை 200,000த்திற்கும் அதிகமாக இருந்ததென்று ஒரு சில வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.

எந்த ஒரு மதத் தலைவரின் தூண்டுதலும் இன்றி, மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட இந்த முயற்சியைக் கண்ட திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டினை 'பாவ மன்னிப்பு ஆண்டென' அறிவித்தார். அந்த ஆண்டு, உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டு, ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெறும் அனைத்து விசுவாசிகளும் தங்கள் பாவங்களுக்குரிய தண்டனைகளிலிருந்து விடுதலை பெறுவர் என்று திருத்தந்தை அறிவித்தார். இதுவே, முதல் யூபிலி ஆண்டெனக் கொண்டாடப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஆண்டுகளைக் கொண்டாடவேண்டும் என்ற வழிமுறையையும் திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள் வகுத்தார்.

அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர், 100 ஆண்டுகள் என்பது மிக நீண்ட கால அளவு என்ற காரணத்தாலும், ஒருவரது வாழ்நாளில் ஒரு முறையாகிலும் புனித ஆண்டை, அல்லது யூபிலி ஆண்டைக் கொண்டாட வாப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை யூபிலியைக் கொண்டாட வழிமுறைகள் வகுத்தனர். எனவே, 1300ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டு முடிய, 700 ஆண்டுகளில் 26 முறை புனித ஆண்டுகள் கொண்டாடப்பட்டுள்ளன. இவை, சாதாரண யூபிலி ஆண்டுகள் என்று அழைக்கப்பட்டன. சாதாரண யூபிலி ஆண்டுகளில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

1575ம் ஆண்டு திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டைக் கொண்டாட, 300,000த்திற்கும் அதிகமான திருப்பயணிகள் உரோம் நகருக்கு வந்தனர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1675ம் ஆண்டு, திருத்தந்தை 10ம் கிளமென்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த யூபிலி ஆண்டில், சுவீடன் நாட்டு அரசி, கிறிஸ்டீனா அவர்கள், உரோம் நகருக்கு, திருப்பயணியாக சென்றார். அங்கு, தாழ்ச்சியின் அடையாளமாகவும், தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், அரசி கிறிஸ்டீனா அவர்கள், மூவொரு இறைவன் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த நோயாளிகளின் காலடிகளைக் கழுவினார். இதே யூபிலி ஆண்டில், உரோம் நகரில் உள்ள கொலோசியம் திடல், கிறிஸ்தவ மறைசாட்சிகளின் பெயரால் அர்ச்சிக்கப்பட்டது.

1700ம் ஆண்டு, யூபிலி கொண்டாடப்பட்ட வேளையில், திருப்பயணிகளின் தேவைகளை நிறைவேற்ற, திருத்தந்தை 12ம் இன்னொசென்ட் அவர்கள், வானதூதரான புனித மிக்கேல் பெயரால் ஒரு பயணியர் விடுதியைத் திறந்து வைத்தார்.

இந்த வரலாற்றுக் குறிப்பை வாசிக்கும்போது, கடந்த வாரம், டிசம்பர் 18, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கிவரும் காரித்தாஸ் பிறரன்பு விடுதிக்குச் சென்று, அங்கு, திருக்கதவைத் திறந்துவைத்த நிகழ்வு மனதில் நிழலாடுகிறது. 600க்கும் மேற்பட்ட வறியோருக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்குவதிலும், 200க்கும் அதிகமான வீடற்றவருக்கு படுக்கை வசதிகள் செய்துத் தருவதிலும் ஈடுபட்டுள்ள உரோம் காரித்தாஸ் விடுதியின் கதவுகளை, புனிதக் கதவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தது, பொருளுள்ள அடையாளமாகத் தெரிகிறது. இறைவனின் இல்லங்களில் மட்டுமல்ல, பிறரன்பு இல்லங்களிலும் திருக்கதவுகள் உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது.

1725ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டையொட்டி, விடுதலைபெற்ற 500க்கும் அதிகமான கிறிஸ்தவ அடிமைகள், இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கோண்டனர்.

1750ம் ஆண்டு திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டில், பெருமளவில் திருப்பயணிகள் கலந்துகொண்டனர் என்றும், முதல் முறையாக, அமெரிக்கக் கண்டத்திலிருந்தும், ஆசியக் கண்டத்திலிருந்தும் திருப்பயணிகள் உரோம் நகருக்குச் சென்றிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த யூபிலி ஆண்டையொட்டி, அசிசிநகர் புனித பிரான்சிஸ் துறவுசபையைச் சேர்ந்த புனித லியோனார்ட் என்ற துறவி, உரோம் நகரின் புகழ்பெற்ற கொலோசியம் திடலில், சிலுவைப்பாதைத் தலங்களை நிறுவினார்.

20ம் நூற்றாண்டைக் காயப்படுத்திய இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டில் யூபிலி ஆண்டை அறிவித்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உலக அமைதிக்காகச் சிறப்பாகச் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதே ஆண்டு, நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை அவர்கள், மரியன்னையின் விண்ணேற்பு, ஒரு விசுவாச சத்தியம் என்பதையும் அறிக்கையிட்டார்.

2000மாம் ஆண்டு கொண்டாடப்பட்ட யூபிலி, 25,50,100 என்ற எண்களைத் தாண்டி, 1000 என்ற எண்ணுடன் ஒரு மில்லென்னியம் என்ற அளவில் கொண்டாடப்பட்ட முதல் யூபிலியாகத் திகழ்ந்தது. 'கிறிஸ்து, நேற்றும், இன்றும், என்றும்' என்ற விருதுவாக்குடன் கொண்டாடப்பட்ட இந்த யூபிலி, பெரிய யூபிலி என்றும் அழைக்கப்பட்டது.

1300க்கும், 2000த்திற்கும் இடைப்பட்ட 7 நூற்றாண்டுகளில், 1800, மற்றும் 1850 ஆகிய இரு ஆண்டுகள், பல்வேறு அரசியல் நெருக்கடிகளின் காரணத்தால் யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் தடைபட்டன. இந்த 700 ஆண்டுகளில் கொண்டாடப்பட்ட 26 யூபிலிகள், சாதாரண யூபிலி ஆண்டுகள் என்றழைக்கப்பட்டன.

இந்த யூபிலி ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றைத் தொகுத்து சிந்திக்கும்போது, யூபிலி என்பது, ஒருவரது தனிப்பட்ட வாழ்வைச் சீரமைக்கும் ஒரு பக்தி முயற்சியாக மட்டும் இல்லாமல், சமுதாயத்தைச் சீரமைக்கும் முயற்சிகளையும் கொண்டதாக இருந்ததென்பதை உணரலாம். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யூபிலி என்ற எண்ணம், தனிப்பட்ட, மற்றும் சமுதாயச் சீரமைப்பு இரண்டையும் வலியுறுத்துகின்றது. இக்கருத்தின் எதிரொலியை, திருஅவை வரலாற்றில் சாதாரண யூபிலிகள் கொண்டாடப்பட்டபோது காண முடிகிறது.

25,50,100 ஆகிய எண்களையொட்டி அறிவிக்கப்பட்ட சாதாரண யூபிலிகள் அல்லாமல், குறிப்பிட்ட காரணங்களுக்காக, திருத்தந்தையர், சிறப்பு யூபிலி ஆண்டுகளை அறிவித்துள்ளனர். இந்தப் பழக்கம் 16ம் நூற்றாண்டில், ஆரம்பமானது. முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் (1585-1590) அவர்களால் அறிவிக்கப்பட்டது. அவர் தனது தலைமைத்துவப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, கி.பி.33ம் ஆண்டு, அவர், சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்ற கணிப்பின் அடிப்படையில், 1933ம் ஆண்டு, நமது மீட்பின் 1900மாம் ஆண்டினை, சிறப்பு யூபிலி ஆண்டாகக் கொண்டாட, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1983ம் ஆண்டு, மீட்பு வரலாற்றின் 1950 ஆண்டுகள் நிறைவுற்றன என்பதால், அதை ஒரு சிறப்பு யூபிலி ஆண்டென திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு யூபிலி ஆண்டுகள், இவை இரண்டு மட்டுமே!

21ம் நூற்றாண்டின் முதல் சிறப்பு யூபிலி ஆண்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து, இதுவரை, கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.

தற்போது நாம் சிறப்பித்துவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்குக் காரணம், 50 ஆண்டுகளுக்குமுன், 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி நிறைவுற்ற 2ம் வத்திக்கான் சங்கம். மதில் சுவர்களால் சூழப்பட்ட ஒரு கோட்டைபோல், பல நூற்றாண்டுகளாகக் காட்சியளித்த திருஅவையை, ஒரு தாயாக இவ்வுலகிற்குக் காட்டிய பெருமை, 2ம் வத்திக்கான் சங்கத்தையே சேரும். அச்சங்கம் முடிந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதைக் கொண்டாடவும், திருஅவை இன்றைய உலகில் ஒரு தாயாக தன் பணியைத் தொடரவும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.

இந்த சிறப்பு யூபிலி ஆண்டினை, ஏன் 'இரக்கத்தின் யூபிலி' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார் என்பதையும், 'யூபிலி' என்ற வார்த்தைக்கு விவிலியம் தரும் பொருள், யூபிலி ஆண்டில் ஆற்றவேண்டிய கடமைகள் என்று விவிலியம் கூறுவனவற்றையும் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.