2015-12-22 15:16:00

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சி


டிச.22,2015. ஆண்டுதோறும் ஏழு விழுக்காடு வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்படும் இந்தியப் பொருளாதாரம், அடுத்த பத்து ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சிப் பொருளாதாரமாக உயர்ந்து, சீனாவையும் கடந்து செல்லும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்தியப் பொருளாதாரத்துக்கு உள்ளது, அதாவது ஏழு விழுக்காடு என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, வெகுவேகமாக வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக பன்னாட்டு வளர்ச்சி மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 அதேநேரம், சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலை கண்டு ஆண்டுக்கு 4.3 விழுக்காடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் பொருளாதார நாடுகள் மற்றும் பிற உற்பத்தி நுகர்வுப் பொருள் பொருளாதார நாடுகள், பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் வேளையில் தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஒளிமயமாக உள்ளன.

இந்தியா தனது உற்பத்தித் திறன்களில் முக்கியமான வளர்ச்சிநிலையைப் பெற்றுள்ளது. வித்தியாசமான பொருட்கள் மூலம், இந்தியாவின் ஏற்றுமதிகள் பல்வகைக் கூறுகளாக மாறும் வாய்ப்புள்ளது. அதாவது மருந்துப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று, ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பொருளாதார வளர்ச்சித்துறை பேராசிரியர் Ricardo Hausmann கூறியுள்ளார்.

2024ம் ஆண்டு வரை அமெரிக்கப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.8 விழுக்காடு என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி காணும். பிரிட்டன் 3.2 விழுக்காடு இஸ்பெயின் 3.4 விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ச்சி காணும்.

2016ம் ஆண்டு 7.3 விழுக்காடு மற்றும் 2017-ல் 7.5 விழுக்காடு என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று ஐ.நா. ஏற்கெனவே கணித்துள்ளது. 

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.