2015-12-21 15:50:00

முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடில்


டிச.21,2015. சனவரி முதல் நாள் மாலை 5 மணிக்கு உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் அன்னையாம் புனித கன்னி மரியாவின் விழா நாளும், 49வது உலக அமைதி நாளுமான சனவரி முதல் தேதியன்று தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஈசா என்ற ஒரு முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடிலை, கடந்த புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிற்பி Gilberto Perlotto அவர்களின் உதவியுடன், குறைந்தது 103 நாடுகளைச் சேர்ந்த 208 மரத்துண்டுகளால், இக்குடிலை உருவாக்கியிருக்கிறார் சிறுமி ஈசா.

இம்மரத்துண்டுகள், போர் மற்றும் குற்ற வன்முறைகள் இடம்பெறும் இடங்கள், இயற்கை அல்லது மனிதர் காரணமாக இடம்பெற்ற பேரிடர்ப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை. வட இத்தாலியின் வெனெத்தோ மாநிலத்தில் Pedavenaவில் துன்புறும் சிறார்க்கென அமைக்கப்பட்டுள்ள வில்லா சான் பிரான்சிஸ்கோ இல்லத்தில் வாழ்கின்ற சிறுமி ஈசா இக்குடிலை அமைத்துள்ளார். 

இந்தக் குடில் அமைக்கப்பட்ட முறை குறித்து கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குடிலின் முன்பாக சிறிது நேரம் அமைதியாகச் செபித்து ஆசிர்வதித்தார். மேலும், இக்குடில் திருத்தந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் வத்திக்கான் அதிகாரிகள் கூறினர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.