2015-12-21 15:42:00

பெற்றோர், பிள்ளைகள்மீது காட்டும் அன்பே விலைமதிப்பில்லா பரிசு


டிச.21,2015. பெற்றோர், பிள்ளைகளுக்கு வழங்கும் மிகவும் விலைமதிப்பில்லாத பரிசு பொருள்கள் அல்ல, மாறாக, அவர்கள் பிள்ளைகள்மீது காட்டும் அன்பே என்று வத்திக்கான் பணியாளர்களிடம் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் நண்பகலில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், வத்திக்கானில் பணியாற்றும் அனைவரையும், அவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வத்திக்கானில் இடம்பெற்ற துர்மாதிரிகைகளுக்கு மன்னிப்புக் கேட்ட திருத்தந்தை, வத்திக்கான் பணியாளர்கள், தங்களின் திருமண வாழ்வை மேம்படுத்தி, பிள்ளைகளோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் பண்பை, எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் காரியமாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பிள்ளைகள் முதிர்ச்சிப் பண்பில் வளர்வதற்கு அவர்களுடன் உரையாடல் நடத்துமாறும், தாத்தா பாட்டிகளையும், வயதானவர்களையும் அன்புடன் பராமரிக்குமாறும், பிள்ளைகள் வளர்ப்பில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை உணருமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், அன்றைய நாள் மாலைக்குள் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்பதை மறக்கக் கூடாது, இந்தப் பனிப்போர் அடுத்த நாளைக்குத் தொடரக் கூடாது, அடுத்த நாளைக்கு அந்தப் பனிப்போரைத் தொடர அனுமதிப்பது, மிகவும் ஆபத்தானது என்றும், இச்சந்திப்பில் கலந்துகொண்ட திருமணமான தம்பதியரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருமணத்தின் அடிப்படைக் கூறு, திருமண வாழ்வையும், பிள்ளைகளையும் பராமரிப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றாட வாழ்வில் கணவருக்கும் மனைவிக்கும் இடையே, பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே, சகோதர சகோதரிகளுக்கு இடையே இரக்கப்பண்பு விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.