2015-12-21 15:36:00

திருப்பீட நிர்வாகிகளுக்கு திருத்தந்தை உரை


டிச.21,2015. திருப்பீட தலைமையகத்திற்குத் தேவைப்படும் இன்றியமையாத கூறுகளை வலியுறுத்திய அதேவேளை, இரக்கத்தின் யூபிலி ஆண்டு சுட்டிக்காட்டும் நன்றியுணர்வு, புதுப்பித்தல், தவம், ஒப்புரவு ஆகியவற்றின் பாதையைப் பின்செல்லுமாறு திருப்பீட நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் திருப்பீட நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சில நாள்களாக எனக்கு காய்ச்சல், அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டு உரை வழங்குகிறேன், மன்னிக்கவும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே சந்திப்பில் திருப்பீட தலைமையகத்தைப் பாதித்திருந்த 15 நோய்கள் பற்றிக் கூறினேன், இன்று அதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் கூறுகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, திருப்பீட தலைமையகத்தில் நாம் சந்தித்த துர்மாதிரிகைகள் வேதனையை அளித்தாலும், திருப்பீடச் சீர்திருத்தங்கள், மேலும் மிக உறுதியோடும், பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் கூறினார்.

பரிந்துரைகள் மற்றும் இலஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது, ஆன்மாக்களைப் புண்படுத்தி, நம் சான்று வாழ்வின் நம்பகத்தன்மையை அச்சுறுத்தும் துர்மாதிரிகைகளையும், அதிகாரத்துவப் பாணியில் செயலாற்றுவதையும் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் விளக்கினார் திருத்தந்தை. மேலும், நன்மைபுரிவதை அழிக்கும் கோட்பாடாக மாறும் உண்மையில்லாத பிறரன்பு, அன்பில்லாத உண்மை நேர்மையற்ற தீர்ப்புக்கு இட்டுச்செல்லும்.. என்று, மறைப்பணி, கனிவு உட்பட பல கூறுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செபத்தோடு இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் அனைவரும் உழைப்பாளர்கள், கட்டட மேலாளர்கள் அல்ல, நாம் பணியாளர்கள், மெசியா அல்ல. நமக்குச் சொந்தமில்லாத எதிர்காலத்தின் இறைவாக்கினர்கள் நாம் என்று இச்செபம் நிறைவடைகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.