2015-12-21 16:00:00

இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் வியப்பை உணர்வோம்


டிச.21,2015. கடவுளின் மாபெரும் கொடையாகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும்போது கிடைக்கும் வியப்பை உணர்வோம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வியப்புப் பற்றியும், மனித சமுதாயத்தை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவை அவர் அனுப்பிய அவரது மாபெரும் கொடை பற்றியும் பேசினார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, கொடைகளில் எல்லாம் சிறந்த கொடை என்றும், தகுதியற்ற நமக்கு அவர் கொணர்ந்துள்ள மீட்பு, இயேசுவைச் சந்திப்பதில் கிடைக்கும் வியப்பை உணரச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அடுத்த மனிதரில், வரலாற்றில், திருஅவையில் இயேசுவைச் சந்திக்காவிட்டால், அவரைச் சந்திப்பதன் வியப்பை நம்மால் கொண்டிருக்க இயலாது என்றுரைத்த திருத்தந்தை, அடுத்த மனிதர், வரலாறு, திருஅவை ஆகிய மூன்று வியப்பின் இடங்கள் பற்றி விளக்கினார்.

"கிறிஸ்மஸை அர்த்தமுள்ள வகையில் சிறப்பிக்க வேண்டுமெனில் வியப்பின் இடங்களில் குடியிருக்க நாம் அழைக்கப்படுகிறோம். நம் அன்றாட வாழ்வில் இந்த  வியப்பின் இடங்களில் எவை? முதல் இடம், நம்முடன் வாழும் மனிதர்கள். ஏனெனில் இயேசுவின் பிறப்பிலிருந்து, ஒவ்வொரு மனிதரின் முகமும் இறைமகனின் சாயலைத் தாங்கியுள்ளது. இந்தச் சாயலை குறிப்பாக ஏழைகளின் முகத்தில் காண்கிறோம். காரணம், கடவுள் இந்த உலகில் ஏழையாக நுழைந்தார். ஏழைகள் தம்மை முதலில் பார்க்க அனுமதித்தார். இரண்டாவது வியப்பின் இடம் வரலாறு. அதை விசுவாசக் கண்கொண்டு நோக்கினால் இந்த உண்மை புரியும். பல நேரங்களில் இதைச் சரியாகவே புரிந்துகொள்கிறோம். ஆனால், இந்த உலகம், பொருளாதாரச் சந்தையால் தீர்மானிக்கப்பட்டு, நிதி அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகார வர்க்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும்போது வரலாறு பற்றிய நமது பார்வை பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் கிறிஸ்மஸ் கடவுள் இவை அனைத்தையும் புரட்டிப் போடுகிறார். எவ்வாறெனில், அன்னை மரியா பாடியதுபோன்று, வலியவர் அரியணையினின்று இறக்கப்படுவர், எளியோர் உயர்த்தப்படுவர், பசித்திருப்பவர் பல நலன்களால் நிரப்பப்படுவர், செல்வர் வெறுங்கையராய் அனுப்பப்படுவர். மூன்றாவது வியப்பின் இடம் திருஅவை. இதை ஒரு சமய நிறுவனமாக நோக்காமல், ஒரு தாயாக நோக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தமது அனைத்து மகிழ்வாக இருந்த தம் ஒரேயொரு மகனை நமக்கு அளித்ததன் வழியாக, அவர் தம்மையே நம் அனைவருக்கும் அளித்தார், சீயோனின் தாழ்மையும் ஏழையுமான மரியா, மிக உன்னதமானவரின் திருமகனின் தாயாக மாறினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் மாபெரும் கொடையையும், முன்னரே தெரிந்துகொள்ள முடியாத அவரின் வியப்பையும் உணர்ந்து கொள்வதற்கு அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றும் திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.