2015-12-21 16:06:00

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபம்


டிச.21,2015. இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் செபிப்போம் என்று சொல்லி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து அருள் நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடும் வெள்ளத்தால் அண்மையில் பாதிக்கப்பட்ட அன்புக்குரிய இந்திய மக்களை இந்நேரத்தில் நினைக்கின்றேன் என்றுரைத்த திருத்தந்தை, இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு இறைவன் நிறைசாந்தியை அளிக்குமாறும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

சென்னையில் அண்மையில் இடம்பெற்ற கடும் வெள்ளத்தால் அந்நகரின் 48 இலட்சம் மக்களில் பெருமளவினர் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றது.

இன்னும், தங்கள் குடில்களில் வைக்கும் பாலன் இயேசு திருவுருவங்களை, இம்மூவேளை செப உரைக்குக் கொண்டு வந்திருந்த உரோம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள இடங்களின் சிறாரை வாழ்த்தியதோடு தனக்காகச் செபிக்குமாறும் அச்சிறாரைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.