2015-12-19 16:01:00

மீட்பின் பாதையை ஆடம்பரத்திலும் பெருமையிலும் காண இயலாது


டிச.19,2015. இயேசு, ஒரு மாளிகையில் ஓர் இளவரசிக்குப் பிறக்கவில்லை, ஆனால், உரோமைப் பேரரசின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய இளம் சிறுமிக்கு, தாழ்மையில் வந்து பிறந்தார் என்று, உரோம் காரித்தாஸ் அமைப்பின் வீடற்றவர் மையத்தில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மத்திய இரயில் நிலையத்துக்கருகில் உரோம் காரித்தாஸ் அமைப்பு நடத்தும்  வீடற்றவர் மையத்திற்கு இவ்வெள்ளி மாலையில் சென்று திருப்பலி நிறைவேற்றி புனிதக் கதவைத் திறந்து வைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மரியா கருவுற்றிருந்தது குறித்து புறணிகளும், பழிச்சொற்களும் சூழ்ந்திருந்த நிலையில், புனித யோசேப்பு, மரியாவை தனது மனைவியாக ஏற்று, மிகவும் தாழ்ச்சியுடன் செயல்பட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இதேபோல் நாமும், இன்று செல்வங்கள், பெருமைகள், அதிகாரங்கள் ஆகியவை மத்தியில் இறைவனைக் காண முடியாது, மாறாக, இறைவனை ஏறக்குறைய மறைவான வழியில், அதிகத் தேவையில் இருப்பவர், நோயாளர், பசியாய் இருப்பவர் மற்றும் சிறையில் இருப்பவரில் காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மக்கள் அனைவரின் இதயங்களைத் திறக்கும்பொருட்டு இந்த வீடற்றவர் இல்லக் கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும், மீட்பின் பாதையை ஆடம்பரத்திலும் பெருமையிலும், அதிகாரத்திலும் காண இயலாது, மாறாக, இறைவனின் அன்புத்தழுவல் மற்றும் மன்னிப்பு வழியாகக் காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

நாம் புறக்கணிக்கப்படுவதை உணரும்போது இறைவனின் இரக்கத்தின் தேவையையும் நாம் உணர்கிறோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் மற்றும் உரோம் தூய ஜான் இலாத்தரன் பேராலயப் புனிதக் கதவுகளைத் திறந்து வைத்துள்ள திருத்தந்தை, உரோம் காரித்தாஸ் அமைப்பு நடத்தும் வீடற்றவர் மையத்தின் புனிதக் கதவையும் இவ்வெள்ளி மாலையில் திறந்து வைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.