2015-12-19 15:44:00

புகலிடம் தேடிய ஆபத்தான பயணங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி


டிச.19,2015. பாதுகாப்பையும், நல்ல வாழ்வையும் தேடி, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டபோது தங்களின் வாழ்வை இழந்துள்ள ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இவ்வெள்ளியன்று நினைவுகூரப்பட்டனர்.

குடிபெயர்ந்தவர் உலக நாளான இவ்வெள்ளியன்று, உலகெங்கும் மக்கள் மெழுகுதிரிகளை ஏந்தி, ஆபத்தான பயணங்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்தனர்.

இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், 2015ம் ஆண்டு, மனிதத் துன்பம் மற்றும் குடிபெயர்ந்தவர் துன்பங்களை நினைவுகூரும் ஆண்டாக அமைந்துள்ளது என்று கூறினார்.

கடந்த 12 மாதங்களில் புகலிடம் தேடிய ஆபத்தான பயணங்களில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளார் பான் கி மூன்.

ஐ.நா.பொது அவை, 1990ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, அனைத்துக் குடிபெயர்ந்தவர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அனைத்துலக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அந்நாளே உலக குடிபெயர்ந்தவர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.