2015-12-19 16:07:00

உரோம் சாலையில் “புனித பிரான்சிஸ்” மருத்துவ சிகிச்சை அமைப்பு


டிச.19,2015. “இரக்கம், மனிதரை இறைவனோடு ஒன்றிணைக்கும் பாதையாகும். இது, இறையன்பின்மீது நம்பிக்கை கொள்வதற்கு இதயத்தைத் திறக்கின்றது” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டை தெளிவான முறையில் சிறப்பிக்கும் விதமாக, உரோம் நகரில் சாலையில் மருத்துவ சிகிச்சை என்ற ஒரு புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில், “புனித பிரான்சிஸ்(SAN FRANCESCO)” என்ற பெயரில் இயங்கும் இந்த மருத்துவ சிகிச்சை அமைப்பு, உரோம் ரெஜினா சேலி மத்திய சிறைச்சாலை தன்னார்வலர்களின் மையத்தில் மருத்துவ ஒருமைப்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்போடு இயங்குகின்றது.

இச்சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski, உரோம் துணை ஆயர் Paolo Lojudice உட்பட பலர் கலந்து கொண்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “புனித பிரான்சிஸ்” மருத்துவ சிகிச்சை அமைப்பு, சனிக்கிழமையிலும், இரு புதன் கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.