2015-12-19 15:54:00

இரக்கம், மனிதருக்குத் தேவைப்படும் மிக உண்மையான மருந்து


டிச.19,2015. இரக்கம், முதலும் மிக உண்மையானதுமான மருந்தாக மனிதருக்கு உள்ளது என்பதை, சில நாள்களுக்கு முன்னர் நாம் தொடங்கியுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு நம் மனங்களிலும் இதயங்களிலும் பதித்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய இரயில்துறை அமைப்பில் பணியாற்றுகின்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என, ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கப் பண்பு நம் எல்லாருக்கும் மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

இரயில்துறையின் கடினமான பணிகள், இத்துறை பல நகரங்களில் தொடங்கியுள்ள உதவி மையங்கள், உரோம் மத்திய இரயில் நிலையத்துக்கருகில் நடத்தப்பட்டு வரும் ஓஸ்தெல்லோ பயணியர் தங்குமிடம் போன்றவற்றையும் குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவன், தமது இரக்கத்தை நமக்குத் தொடர்ந்து நிரம்பப் பொழிந்து வருகிறார், நாம் ஒவ்வொருவரும் நமது மனிதத்தை முழுமையாய் வாழும்பொருட்டு அந்த இரக்கத்தை நமக்கு அடுத்திருப்பவர்க்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இப்புனித ஆண்டில் உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ள புனிதக் கதவுகள் இதனையே நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும், உரோம் மத்திய இரயில் நிலையத்துக்கருகிலுள்ள ஓஸ்தெல்லோ இல்லம், பிறரன்பின் புனிதக் கதவாக மாறியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புப் பாதை வழியாகக் கடந்து செல்பவர்கள், மன்னிப்பையும் ஆறுதலையும் அடைகின்றனர், தங்கள் சகோதரர்களின் மீட்புக்காக மிகுந்த மனத் தாராளத்துடன் தங்களையே வழங்க முன்வருகின்றர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் காரித்தாஸ் அமைப்பை உருவாக்கிய அருள்பணியாளர் Luigi Di Liegro அவர்கள் பெயரில் ஓஸ்தெல்லோ இல்லம் 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.