2015-12-17 15:12:00

கத்தோலிக்க இயக்கம் அமைப்பின் இளையோருடன் திருத்தந்தை


டிச.17,2015. கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில் உங்களைப் போன்ற இளையோரைச் சந்தித்து, வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வது மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை அவர்கள், இவ்வியாழன் காலை ஓர் இளையோர் குழுவிடம் கூறினார்.

கத்தோலிக்க இயக்கம் (Catholic Action) என்ற அமைப்பைச் சார்ந்த 60 இளையோரை, இவ்வியாழன் காலையில் வத்திக்கான் இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தன் பிறந்தநாளுக்கென அவர்கள் தந்த ‘கேக்’கிற்காக நன்றி கூறியதோடு, அவ்விளையோர் வழியே, இத்தாலியில் உள்ள அனைத்து கத்தோலிக்க இளையோருடனும் தன் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் கூறினார்.

'உம்மை நோக்கி பயணிக்க' என்ற சொற்களை, வருகிற ஆண்டின் விருதுவாக்காக கத்தோலிக்க இயக்கம் தேர்ந்துள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை, ஆண்டவரை நோக்கிச் செல்லும் பாதையில், பழிக்குப் பழி என்ற உணர்வுக்குப் பதில், மன்னிப்பு இருக்கும் என்றும், தன்னலத்திற்குப் பதில், கூட்டுறவு முயற்சி இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் புதிய முயற்சியை, ஆக்ரிஜெந்தோ (Agrigento) மறைமாவட்டத்தில் துவங்கியுள்ளது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்கள் நட்பினாலும், செபங்களாலும் இம்மக்களுக்கு செய்யும் உதவிகளோடு, சிறு சிறு தியாகங்களையும் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இப்புதன் மறைகல்வி உரை சந்திப்பின்போது, படகில் பிறந்த ஒரு குழந்தையுடன், அதன் பெற்றோர் தன்னைச் சந்தித்தனர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, எத்தனையோ குழந்தைகள் பிரக்கமுடியாமல் இறப்பதையும், நல்லமுறையில் வளர முடியாமல் துன்புறுவதையும் இளையோர் சிந்தித்துப்  பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இத்தாலிய கத்தோலிக்க இயக்கம் ஆற்றிவரும்  பணிகள், குறிப்பாக, கல்வித் துறையில் இவ்வமைப்பினர் ஆற்றி வரும் பணிகள் போற்றுதற்குரியன என்று தன் உரையில் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கியதோடு, தனக்காக இளையோர் செபிக்க மறக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.