2015-12-17 13:35:00

கடுகு சிறுத்தாலும்–கருணை கொடுப்பவரின் பாத்திரத்தை நிறைப்பது


அது கிறிஸ்மஸ் காலம். சிறுவன் கண்ணனிடம் ஒரு பெரியவர் வந்து, ஒரு பெட்டியைக் கொடுத்து, கண்ணா, நீ நல்ல காரியம் செய்தால் இதில் ஒரு ரூபாய் கூடும். தீய காரியம் செய்தால் ஒரு ரூபாய் குறையும். இந்தப் பெட்டியை நீ எப்போது நிரப்புகிறாயோ அப்போது நீ சொர்க்கத்தைக் காண்பாய் என்று சொல்லிச் சென்றார். பெட்டியை நிரப்புவதில் ஆர்வமாய் இருந்தான் சிறுவன். அடுத்த நாள் தெருவில் பிச்சைக் கேட்ட ஒருவருக்கு ஒரு ரூபாய் போட்டான் கண்ணன். பின்னர் வீட்டில் சென்று பார்த்தபோது அந்தப் பெட்டியில் ஒரு ரூபாய் இருந்தது. மற்றொரு நாள் தனது தம்பி, தனது சட்டையைப் போட்டதற்காக அவனை அடித்தான். அந்தப் பெட்டியில் அவன் சேர்த்து வைத்திருந்த காசுகள் எல்லாம் மறைந்துவிட்டன. அப்போது கண்ணன், நல்லது செய்யும்போது பெட்டி நிறைவதையும், தீயவை செய்யும்போது பெட்டி குறைவதையும் கண்டுபிடித்தான். எனவே அதை உணர்ந்து சிறிது சிறிதாக அந்தப் பெட்டியை நிரப்பிவிட்டான் கண்ணன். ஒருநாள் அவன் தனது அப்பாவோடு தெருவில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரியவர் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தார். அவரை அணுகிக் காரணம் கேட்டான் கண்ணன். நான் கஷ்டப்பட்டு ஒரு பெட்டியில் காசு சேர்த்து வைத்திருந்தேன். அப்பெட்டியைக் காணவில்லை என்றார் அவர். உடனே கண்ணன், தாத்தா, அழாதீங்க, என்னிடம் ஒரு பெட்டி இருக்கு, அதை வைச்சுக்குங்க. நான் சிறியவன். என்னால் இன்னொரு பெட்டியை நிரப்ப முடியும் என்று பெரியவரின் கண்ணீரைத் துடைத்தான். வீடு சென்று தனது பெட்டியைக் கொண்டுவந்து அந்தப் பெரியவரிடம் கொடுத்தான் கண்ணன். அன்பு உருவத்தில் அல்ல, உணர்வில் இருப்பது. கருணை, கொடுப்பவரின் இதயப் பாத்திரத்தை நிறைப்பது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.