2015-12-16 15:58:00

புதன் மறைக்கல்வி உரை – இரக்கத்தின் கதவுகள் திறந்துள்ளன


டிச.,16,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, உலகம் முழுவதும் உள்ள பேராலயங்களின் புனிதக் கதவுகள் கடந்த ஞாயிறு முதல், விசுவாசிகளுக்கு திறக்கப்பட்டுள்ளதைக் குறித்து, இவ்வாரம் தன் புதன் மறைக்கல்வி உரையில் கருத்துக்களை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் அனைத்துப் பேராலயங்களின் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டதுடன், யூபிலி ஆண்டு, கடந்தவாரம் துவக்கப்பட்டுள்ளது. இது அகில உலக திருஅவையுடன் நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பின், கண்ணால் காணக்கூடிய வெளிப்பாடு. மனித குலமனைத்திற்கும் இறைவனின் கருணைநிறை அடையாளமாக இருக்குமாறு, கிறிஸ்துவில் திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நினைவூட்டியது. நாம் ஒவ்வொருவரும் பிறரன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பை செயல்படுத்துவதன் வழியாக, இதயங்களை உருமாற்றி, ஒப்புரவையும் அமைதியையும் கொணரும் இறை அன்பின் வல்லமையின் அடையாளமாக விளங்கமுடியும். இந்தப் புனித ஆண்டில் நாம் இரக்கத்தின் கதவு வழியாகச் செல்லும்போது, கிறிஸ்துவின் மீட்பளிக்கும் வல்லமையுடைய அன்பு எனும் மறையுண்மைக்குள் ஆழமாக நுழைவதற்குரிய நம் ஆவலை வெளிப்படுத்துகின்றோம். நானே ‘வாயில்’ என்று கூறும் இயேசு, நாமும் உண்மையான மனமாற்றத்துடன், நம் இதயக்கதவுகளை, இயேசு மற்றும் அயலாரின் நேர்மையான அன்பை நோக்கி திறக்கவேண்டும் என நம்மிடம் கேட்கிறார். இந்த யூபிலி ஆண்டின் சிறப்பு அடையாளமாக ஒப்புரவு அருளடையாளம் உள்ளது. இந்த அருளடையாளத்தாலேயே, நாம் நம் பாவங்களை ஏற்று, இறைவனின் இரக்கத்தை அனுபவித்து, அவர் வழங்கும் அருளைப் பெறவேண்டும் என கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். இதன் வழியாக, இந்த உலகில் செயல்பாட்டில் இருக்கும், ஒப்புரவாக்கும் அன்பின் பலம் நிறைந்த அடையாளங்களாக நம்மை மாற்றுகிறார் கிறிஸ்து.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.