2015-12-16 15:42:00

கடுகு சிறுத்தாலும் – பிறரை நாம் எப்படி பார்க்கிறோம்?


காட்டில் வாழ்ந்து வந்த துறவி ஒருவருக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். அம்மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன் தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

ஒருநாள் துறவி தனித்திருந்தபோது அவரிடம் சென்று, ""ஐயனே! தாங்கள் பாடம் கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுகிறோம். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்தச் சலுகையை விரிவுபடுத்தக் கூடாது?'' என்று கேட்டனர். துறவி, அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும், அமைதியாகப் பதிலளித்தார். ‘கற்றுக்கொடுப்பதில் நான் பாகுபாடு பார்ப்பதில்லை. என்னை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் அடிக்கடி போய்வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போய், அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்'' என்றார்.

ஆனால், அங்கு சென்றவர்களால், நல்லதன்மை உள்ள ஒருவரைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்தது. அவர்கள் நீண்ட நாட்கள் கடந்து துறவியிடம் வந்து, "ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டோம். ஒரு நல்ல மனிதன் கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள்!'' என்றனர். பிறகு, அந்த பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவரை, துறவி அழைத்து, "நீ பக்கத்து ஊருக்குச் சென்று ரொம்பவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார்.

சில நாட்களில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார் அந்த மாணவர். "ஐயனே! என் பதில் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கலாம். நான் அந்த ஊர் முழுக்க ஆராய்ந்து விட்டேன்; எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவரை என்னால் காண முடியவில்லை''' என்றார் அவர். அவருடைய பதிலைக் கேட்டு, அறிவுக் கூர்மையற்ற அணியைச் சேர்ந்தவர்கள், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர்.

""நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்துதான் துவங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிறபோது உங்களுடைய ஞானம் மலர்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த ஞானம் உதிர்த்து விடுகிறது.  உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே ஞானம். நேர்மறை மனோநிலை உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோநிலை உள்ளவர்களால் மெதுவாகத்தான் வளர்ச்சிக் காண முடியும்'' என்றார் துறவி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.