2015-12-16 16:03:00

உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு கூட்டம்- கர்தினால் டர்க்சன்


டிச.16,2015. இன்றைய உலகின் மனிதர்கள், கடவுள் மட்டில் அக்கறையின்றி வாழ்வதில் துவங்கி, அடுத்தவர் மீதும், இயற்கை மீதும் அக்கறை காட்டாமல் வாழ்கின்றனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்திய 'உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை' என்ற சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடவிருக்கும் 49வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இச்செவ்வாயன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.

'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தி, மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் உருவாகும் அக்கறையின்மை, எவ்விதம் உலக அளவில் பாதிப்புக்களை உருவாக்குகின்றது என்பதை விளக்குகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு மனிதரும் தனக்குள் தானே தன்னிறைவு என்ற உணர்வைப் பெறும்போது, அது, அவர்களை தன்னலத்தில் சிறைப்படுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை மட்டுமே பெறுவதற்கும், கடமைகளை மறப்பதற்கும் தூண்டுதலாக அமைகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் விளக்கிக் கூறினார்.

தன்னலத்தைவிட்டு மனிதர்களால் வெளியேற முடியும்  என்பதை, காலநிலை உலக உச்சி மாநாடான COP21ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 2ம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட பல்வேறு ஏடுகள் போன்றவை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன என்பதையும் திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் துன்புறுவோரின் நலவாழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள 'ஆபேல்' குழு என்ற அமைப்பையும், இத்தாலியின் 'மாபியா' கும்பலின் ஆராஜகத்திலிருந்து மக்களை விடுவிக்கும் 'லிபெரா' என்ற கழகத்தையும் உருவாக்கிய அருள்பணி Luigi Ciotti என்பவர், திருத்தந்தையின் அமைதிச் செய்தி வெளியீட்டு நிகழ்வுக்கு தன் கருத்துக்களை ஒரு கடிதம் வழியே அனுப்பியிருந்தார்.

எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் ஒதுங்கி நின்று அமைதி காப்பது உண்மையான அமைதியை வளர்க்காது என்றும், அடுத்தவரின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதிலேயே உண்மையான அமைதி வளரும் என்றும் திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி வலியுறுத்துகிறது என்பதை, அருள்பணி சியோத்தி அவர்களின் கடிதம் கூறியிருந்தது.

சிரியா, சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி, உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் அஸ்தாலி மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ள புலம் பெயர்ந்தோரில் பலர், அமைதி நாள் செய்தி வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.