2015-12-16 16:15:00

அமைதி ஆர்வலர்கள் : 2002ல் நொபெல் அமைதி விருது


டிச.16,2015. 2002ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற James Earl Jimmy Carter அவர்கள், 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் 39வது அரசுத் தலைவராகப் பணியாற்றியவர். பன்னாட்டு அளவில் இடம்பெற்ற சண்டைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும், உலகில் மக்களாட்சியும் மனித உரிமைகளும் மேம்படவும், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் பல ஆண்டுகளாக இவர் மேற்கொண்டிருந்த அயரா முயற்சிகளுக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது. உலகில் கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே பனிப்போர் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில், பன்னாட்டு அரசியலில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்பதை இவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற சண்டை முடிவுக்கு வந்து, அமைதி ஏற்படுவதற்கு உதவிய Camp David ஒப்பந்தங்கள் உருவானதில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக எல்லாராலும் ஏற்கப்பட்டது. ஜிம்மி கார்ட்டர் அவர்கள் நொபெல் அமைதி விருது பெறுவதற்கு இது ஒன்றே போதுமானதாகவும் பேசப்பட்டது. உலகெங்கும் எண்ணற்ற தேர்தல்களில் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியிருக்கிறார். வெப்பமண்டல நோய்கள் ஒழிக்கப்படுவதற்கும், வளரும் நாடுகளில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்கும் இவர் முன்னின்று செயல்பட்டுள்ளார். இக்காலத்தில் போர்களை நிறுத்துவதற்கு வல்லரசுகளின் அச்சுறுத்தல்கள் பயன்படுத்தப்படும் சூழலில், இடைநிலை வகிப்பு, பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் உலகளாவிய ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மதிக்கப்படல், மற்றும் பொருளாதார வளர்ச்சி வழியாக இயன்றவரை போர்களுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக நிற்கிறார் ஜிம்மி கார்ட்டர்.

உலகில் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், மனிதத் துன்பங்களை ஒழிக்கவும் பணிபுரிவதற்கென, ஜிம்மி கார்ட்டர் அவர்கள் 1982ம் ஆண்டில் கார்ட்டர் மையத்தை உருவாக்கினார். இம்மையம், 2002ம் ஆண்டில் தனது இருபதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பித்த போது நொபெல் அமைதி விருதும் இவரைத் தேடிச் சென்றது. இந்தக் கார்ட்டர் மையத்தின் வழியாக, உலகில் போர்கள் இடம்பெற்ற பல்வேறு பகுதிகளில் அமைதி நிலவ இவர் முயற்சித்தார். அதோடு, இம்மையம் உலகளாவிய நலவாழ்வை முன்னேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. நரம்பு சிலந்தி நோய், பெருக்கெடுத்தோடும் ஆறுகளில் ஈக்களால் பரவும் ஒருவகை தோல் நோய், மலேரியா, கண்ணிமைப்பு நோய், நூல் போன்ற கிருமிகளால் பரவும் lymphatic filariasis நோய், கல்லீரல், கர்ப்பப்பை, சிறுநீரகங்களைப் பாதிக்கும் schistosomiasis என்ற நோய் போன்ற வெப்பமண்டல நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும், அவற்றை ஒழிப்பதற்கும் இம்மையம் முயற்சித்து வருகிறது. ஆப்ரிக்காவில் வேளாண்மை உற்பத்திக்கு உதவுவதன் வழியாக மன நோய்களை ஒழிக்கவும், ஊட்டச்சத்துணவை வழங்கவும் இம்மையம் ஈடுபட்டுள்ளது. நரம்பு சிலந்தி நோயால் தாக்கப்பட்ட மக்களில் 99 விழுக்காட்டுக்கு அதிகமானவர்களை இம்மையம் காப்பாற்றியுள்ளது. 1986ம் ஆண்டில் 35 இலட்சம் பேர் இந்நோயால் தாக்கப்பட்டிருந்தனர். ஆனால் இம்மையத்தின் பணிகளால் 2013ம் ஆண்டில் இந்நோயால் 148 பேர் மட்டுமே தாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. பெருக்கெடுத்தோடும் ஆறுகளில் ஈக்களால் பரவும் ஒருவகை தோல் நோயால் மக்கள் பெருமெண்ணிக்கையில் கண்பார்வையை இழக்க நேரிடுகிறது. இந்நோயால் ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஏமெனில் ஒரு கோடியே எழுபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டர் மையம், 1989ம் ஆண்டிலிருந்து 38 நாடுகளில் 96 தேர்தல்களை கண்காணித்துள்ளது. ஹெய்ட்டி, போஸ்னியா, எத்தியோப்பியா, வட கொரியா, சூடான் மற்றும் பிற நாடுகளில் போர்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இம்மையம் உழைத்துள்ளது. ஜிம்மி கார்ட்டர் அவர்களும், அவரது கார்ட்டர் மையமும் உலகில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆதரவளித்து, இந்த ஆர்வலர்களுக்காக, அந்நாடுகளின் தலைவர்களிடம் பரிந்துபேசி வருகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜார்ஜியா மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தில் 1924ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி பிறந்தார் ஜிம்மி கார்ட்டர். 1963ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் செனட்டராகப் பதவி வகித்திருந்த இவர், 1976ம் ஆண்டில் அரசுத்தலைவர் ஜெரால்டு ஃபோர்டு அவர்களை 57 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரசுத்தலைவரானார். அந்நாட்டில் 1916ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அடைந்த வெற்றியாகும் இது. வியட்நாம் போருக்குக் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துச் சென்ற அனைவருக்கும், இவர் பணியேற்ற இரண்டாவது நாளிலே மன்னிப்பு வழங்கினார். இவர், தனது பணிக்காலத்தில் மின்சக்தித் துறை, கல்வித்துறை ஆகிய இரு புதிய துறைகளை உருவாக்கினார். மின்சார சேமிப்பு, அதன் விலைக் கட்டுப்பாடு, புதிய தொழில்நுட்பம் உட்பட தேசிய அளவில் புதிய மின்சக்தி கொள்கைகளை உருவாக்கினார். வெளிநாட்டு விவகாரங்கள் என்று பார்த்தால், காம்ப் டேவிட் மற்றும் பானமா கால்வாய் ஒப்பந்தங்களில் இவரின் பங்கு குறிப்பிடும்படியானது. பானமா கால்வாய்ப் பகுதியை பானமா நாட்டிடமே திருப்பி அளித்தார். ஆயினும், 1980ம் ஆண்டு தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் ரோனல்டு ரேகன் அவர்களிடம் தோற்றார் ஜிம்மி கார்ட்டர். ரோனல்டு ரேகன், ஐம்பது மாநிலங்களில் 44 இடங்களில் வெற்றி பெற்றார். 2015ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 90வது வயதில் புற்றுநோய்க்கென சிகிச்சையைத் தொடங்கினார் ஜிம்மி கார்ட்டர்.

“அன்பும், அமைதியும் இப்பூமியில் ஆதிக்கம் செலுத்தினால், இயற்கையின் கொடைகளை மதிப்பதற்கு நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தால், மகிழ்வும் அழகும் என்றென்றும் இவ்வுலகில் நிலவும்” என்று சொன்னவர் 2002ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற James Earl Jimmy Carter. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.