2015-12-15 16:57:00

வணக்கத்துக்குரிய ஜோசப் விதயாத்தில் வீரத்துவமான வாழ்வு ஏற்பு


டிச.15,2015. தூய பிரிஜிதாவின் மீட்பர் துறவு சபையை ஆரம்பித்த சுவீடன் நாட்டு அருளாளர் Maria Elisabetta Hesselblad உட்பட ஐந்து இறையடியார்களின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் மற்றும் 12 இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர்நிலைப் பேராயத் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள் இத்திங்கள் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.

கேரளாவில் திருக்குடும்ப சகோதரிகள் சபையைத் தொடங்கிய மறைமாவட்ட அருள்பணியாளர் இறையடியார் ஜோசப் விதயாத்தில் (Joseph Vithayathil),  மற்றும், இத்தாலி, இஸ்பெயின், வியட்னாம், போர்த்துக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறையடியார்களின் வீரத்துவமான  பண்புகளை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.

இறையடியார் ஜோசப் விதயாத்தில் அவர்கள், கேரளாவின் Puthenpallyல் 1865ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்து, 1964ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி Kuzhikkattusseryல் காலமானார்.

மேலும், உக்ரேய்ன் நாட்டில் பிறந்து, கஜகஸ்தானில் இறந்த இறையடியார் அருள்பணியாளர் Ladislao Bukowiński, இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் 1696ம் ஆண்டில் பிறந்து 1755ம் ஆண்டில் இறந்த வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Mariae Celeste Crostarosa, இத்தாலியின் பலேர்மோ நகரில் 1852ம் ஆண்டு பிறந்து 1923ம் ஆண்டில் இறந்த இறையடியார் அருள்சகோதரி Maria di Gesù, இத்தாலியின் La Spezia நகரில் 1904ம் ஆண்டில் பிறந்து 1957ம் ஆண்டில் இறந்த வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Itala Mela ஆகியோரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.