2015-12-15 16:38:00

திருத்தந்தை: திருஅவையின் உண்மையான செல்வம் ஏழை எளியோரே


டிச.,15,2015. திருஅவையின் உண்மையான செல்வம் ஏழை எளியோரேயன்றி, பணமும், உலகம் சார்ந்த சக்தியும் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இச்செவ்வாய்க் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில், மலைப்பொழிவில் கூறிய 'பேறுபெற்றோர்' வாக்கியங்களில், 'ஏழையரை'ப் பற்றி இயேசு முதலில் பேசுகிறார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இறைவாக்கினர் செப்பனியா நூலில் இறைவன் கூறும் வார்த்தைகளையும், நற்செய்தியில், தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மேய்ப்பர்களுக்கும் இயேசு அளித்த எச்சரிக்கை வார்த்தைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் மையப்பொருளாகப் பகிர்ந்தார்.

தாழ்ச்சி, வறுமை, இறைவனில் நம்பிக்கை என்ற மூன்று பண்புகளே திருஅவையில் வெளிப்படவேண்டிய பண்புகள் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

'நான் ஒரு பாவி' என்று தன்னையே தாழ்த்திக்கொள்ள முடியாதவர், அடுத்தவர் பாவங்களையும், குறைகளையும் காணவும், அவர்களைத் தீர்ப்பிடவும் முற்படுகின்றனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

உரோமைய மறைமாவட்டத்தின் தியாக்கோனாகப் பணியாற்றிய புனித இலாரன்ஸ் என்ற இளையவரிடம், திருஅவையின் செல்வங்களை கொணருமாறு அரசர் பணித்தபோது, அவர், வறியோரை அழைத்துவந்து, இவர்களே திருஅவையின் செல்வங்கள் என்று காட்டிய நிகழ்வையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

வறியோரைத் தங்கள் செல்வம் என்று கருதாமல், வங்கியில் சேமித்துள்ள பணத்தை நம்பி வாழ்வோர், உண்மையில் உள்ளத்தில் வறுமையடைந்தவர்கள் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.