2015-12-15 15:25:00

கடுகு சிறுத்தாலும் - சுற்றியுள்ள உண்மைகளைப் பார்க்கும் திறன்


புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர் ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் ஒரு நாள் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் உள்ளே தூங்கச் சென்றனர். நள்ளிரவில் கண்விழித்த ஷெர்லாக் ஹோம்ஸ், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன் மேலே பார் என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகிறது" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, இவ்வளவு பளிச்சென்று விண்மீன்கள் தெரிவது, உனக்கு எதைச் சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.

உடனே, வாட்சன், "நாம் காணும் விண்மீன்களைத் தாண்டி இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அந்த விண்மீன்கள் உனக்கு எதைச் சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக் தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பரே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.

பலகோடி காதங்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைப் பார்க்கத் தெரிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையைப் பார்க்கமுடியாமல் போனது. தொலைதூரம் பார்க்கக்கூடிய திறன் இருப்பது நல்லதுதான்; ஆனால், அதேவேளை, நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகளைப் பார்க்கும் திறனும் வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.