2015-12-15 16:31:00

திருத்தந்தை : 'அக்கறையின்மையைக் களைந்து அமைதியை வெல்க'


டிச.15,2015. இறைவன், அக்கறையற்றவர் அல்ல, அவர் மனிதகுலத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்பவர், நம்மை அவர் கைவிடுவதேயில்லை என்று நான் மனதார நம்பும் உண்மையை, புதிய ஆண்டில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டின் முதல் நாளன்று திருஅவையில் கொண்டாடப்படவிருக்கும் 49வது அகில உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில், அரசுத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உட்பட, ஒவ்வொரு மனிதரும், அமைதியும், வளமான வாழ்வும் பெற தான் வாழ்த்துவதாக, தன் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கையில் தொடர்ந்திட காரணங்கள், அக்கறையின்மையின் பல வடிவங்கள், உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மையால் அச்சுறுத்தப்பட்டுள்ள அமைதி, அக்கறையின்மையிலிருந்து இரக்கம் நோக்கி மனமாற்றம், அக்கறையின்மையை வெல்வதற்கு ஒருங்கிணைந்த சமுதாயத்தை கட்டியெழுப்புதல், ஒருங்கிணைதல், இரக்கம், பரிவினால் உருவாகும் அமைதி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் அடையாளம் அமைதி என்ற ஏழு கருத்துக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலக அமைதி நாள் செய்தியை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் நாம் கேட்டு வந்த செய்திகள், 'சிறு சிறு துண்டுகளாக நடைபெறும் மூன்றாம் உலகப் போரை' நமக்கு உணர்த்துகிறது என்று தன் அமைதிச் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரிஸ் மாநகரில் முடிவுற்ற மாநாடு, திருஅவையில் துவக்கப்பட்டுள்ள இரக்கத்தின் யூபிலி, ஆகிய முயற்சிகள் நமக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.