2015-12-15 16:45:00

கிறிஸ்மஸ் கால திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்


டிச.15,2015. கிறிஸ்து பிறப்பு காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள்.

டிசம்பர் 24 இரவு 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, டிசம்பர் 25 நண்பகலில் ‘ஊர்பி எத் ஓர்பி’ என்ற, உரோம் நகருக்கும் உலகுக்குமான செய்தியையும் சிறப்பு ஆசிரையும் வழங்குவார்.

டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தெ தேயும் நன்றி திருப்புகழ் மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, 49வது உலக அமைதி தினமான சனவரி முதல் தேதியன்று, இறைவனின் அன்னையாகிய தூய கன்னிமரியா பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்துவார். அன்று, உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவையும் திறப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 6ம் தேதி காலை பத்து மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  நிறைவேற்றுவார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.