2015-12-14 16:22:00

வாரம் ஓர் அலசல் – நம் பூமி காக்கப் புறப்படுவோம்


டிச.14,2015.  “கைபேசிகள் அணைந்துவிட்டன. சகமனிதர்களிடம் பேசத் தொடங்கினோம். இப்போது இருட்டிலும் அவர்கள் தெரிகிறார்கள். இல்லை இருட்டில்தான் அவர்கள் தெரிகிறார்கள். தண்ணீரின் நெஞ்சாங்குழி அதிர தூண்களை இறக்கி கட்டடங்கள் எழுப்பினோம். மிச்சமிருந்த தண்ணீரை குளிர்பானங்கள் ஆக்கி அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினோம். நமது கால்களுக்குக் கீழ் நழுவும் பூமியில் சில கேள்விகளோடு அலைந்துகொண்டிருந்தது தண்ணீர். அந்தக் கேள்விகள் ஆகாயத்துக்குப் போய் மீண்டும் பூமிக்கு இறங்கி இப்போது நம்மைச் சூழ்ந்துகொண்டன. வாசலைத் தாண்டியும் நம் வீடு வரைக்கும் கேள்விகளை அனுப்பியிருக்கிறது தண்ணீர்”. சென்னைத் தண்ணீரால் ஒருவரின் கண்ணீரில் கசிந்த வரிகள் இவை. சென்னையில் வெள்ளம் வடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. மழை ஓய்ந்து மனிதம் ஓங்கி வருகின்றது. பாரிசில் டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த காலநிலை மாற்றம்(COP21) உலக உச்சி மாநாட்டை தலைமை தாங்கி நடத்திய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Laurent Fabius அவர்கள், சென்னை மழை வெள்ளம், உலக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை, பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியதை இது உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில்(நவ.30-டிச12,2105) கலந்து கொண்ட ஏறக்குறைய 200 நாடுகளும் இதை உணர்ந்து முடிவெடுத்திருப்பதாகவே தெரிகிறது. உலக நாடுகள் நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென தொடர்ந்து விண்ணப்பித்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் பாரிஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று பலரால் விளக்கப்பட்டுள்ளது. மிகவும் நலிந்த மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கும் என்று நம்புகிறேன். உலக சமுதாயம் மிகுந்த ஒருமைப்பாட்டுணர்வுடன், இந்த இசைவை நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பிக்கிறேன். நைரோபியில் டிசம்பர் 15, இச்செவ்வாயன்று தொடங்கும் உலக வர்த்தக அமைச்சரவை கருத்தரங்கும் தீர்மானங்கள் எடுக்கும்போது ஏழைகளின் தேவைகளை மறக்க வேண்டாமெனக் கேட்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம், பருவநிலை நீதிக்குக் கிடைத்த வெற்றி, இது ஒரு 'மைல்கல் ஒப்பந்தம்', பசுமை எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பணியாற்றப் போகிறோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர  மோடி அவர்கள் வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் உலகுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் கூறியுள்ளார். உலகளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சீனாவும், இந்த உடன்பாடு வரலாற்று ரீதியில் மிகப்பெரிய முயற்சி என்று கூறியுள்ளது. இந்த உலக ஒப்பந்தப்படி...

புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு 2020-ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் உதவி வழங்க உறுதி. புவி வெப்பமடைவதைத் தடுக்க நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்பட இசைவு. பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துவிட ஒப்புதல். பருவநிலை மாற்ற விளைவுகளால் நாடுகளுக்கு ஏற்படும் சேதங்களைச் சரிசெய்ய நீண்ட கால அடிப்படையில் உதவி. நீடித்த சுற்றுசூழல் பாதுகாப்பு வளர்ச்சிக்குத் தேவையான வழிமுறை உதவி. மனித உரிமைகள், பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்கள், புலம்பெயர்வோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள நலிவடைந்தோர் நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாப்பு போன்றவை இந்த பாரிஸ் மாநாட்டு ஒப்பந்தத்தில் உள்ளன.

பருவநிலை மாற்றத்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் 48 விழுக்காடு உணவு தானிய உற்பத்தி குறையும். ஆனால், இன்றையச் சூழலில் உணவு தானியத் தேவை அதிகரித்துள்ளது, இதை எதிர்கொள்ள துரித நடவடிக்கை அவசியம் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகர்வால் அவர்கள், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியக் கடல் நீரில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதுபோல், வெப்பநிலை உயர்ந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் 20 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். உலக பருவநிலை மாற்றத்துக்கு காரணமான 13.5 விழுக்காடு வாயுக்கள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களில் இருந்து வெளியேறுகின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் 28 விழுக்காடு அளவுக்கு வேளாண் பயிர்களில் இருந்து வாயுக்கள் வெளியேறுகின்றன. இதுபோன்ற வாயுக்கள் 60 விழுக்காடு கால்நடைகளில் இருந்தும், 25 விழுக்காடு நெல் போன்ற தாவரங்களில் இருந்தும் வெளியேறுகின்றன. இன்றையச் சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 இலட்சம் டன் கோதுமை உற்பத்தியை இழக்க நேரிடும். இதன் மதிப்பு 5,000 கோடி ரூபாய். வெப்பநிலை உயர்வதால், இதைவிட அதிகப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அகர்வால் அவர்கள் பேசினார். தொடர்ந்து பேசிய கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அவர்கள், கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை, உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.

மேலும், கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகின்றது. பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்கின்றது. இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும். அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என்று கானடாவின் Alberta பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் Mathieu Dumberry அவர்கள் கூறியுள்ளார்.

அன்பர்களே, தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத பேரிடர் காலத்தை, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மாபெரும் மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டு வருகிறது. இவ்வேளையில் இந்த மனிதாபிமானப் பணியின்போது விஷப்பூச்சிக்கடி, இன்னும் பல காரணங்களால் உயிரிழந்த தன்னார்வலர்களுக்கும், மற்ற மக்களுக்கும் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவோம். அதேநேரம், இந்த இயற்கைச் சீற்றம்  சொல்லும் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கோ, இந்தியாவுக்கோ வெள்ளம் புதியதொரு நிகழ்வு அல்ல. உலகில் பங்களாதேஷ் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் வெள்ளம் வரக்கூடிய நாடு இந்தியாதான். நாட்டின் நான்கு கோடி ஹெக்டேர் நிலபரப்பு வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியது. இதில் ஐந்தில் ஒரு பகுதியில் ஆண்டுதோறும் வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது. பிரித்தானிய ஆட்சி காலத்தில் நாட்டின் முக்கிய நதிகளில் மணல்மேடுகளை உருவாக்கி வெள்ளத் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு விடுதலை அடைந்த பின்னர் அணைகள் கட்டி வெள்ளத்தைத் தேக்குவதில் கவனம் திரும்பியது. இன்றைக்கு நாடெங்கும் 4,525 பேரணைகளும், சிற்றணைகளும் இருக்கின்றன. “வெள்ளத்தைத் தடுப்பதற்காக” என்ற பெயரில் இவை மேலும் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை போன்ற மாநகரங்களில் பெரிய அணைகள் எதுவும் இல்லை. ஆயினும் இந்நகரங்களிலுள்ள சதுப்பு நிலங்கள், இயற்கை ஏரிகள், குளங்கள், செயற்கை ஏரிகள், குளங்கள் போன்றவை, தண்ணீர் உறிஞ்சிகளாகச் செயல்படுகின்றன.

ஆனால் சென்னையில் நீர் பாயும் ஆறுகளை, நீர் தேங்கும் ஏரிகளை, நீர் வழிந்தோடும் வடிகால்களை ஆக்ரமித்து கட்டடக் காடுகளாக மாற்றிய கொடுங்குற்றத்துக்குத் தரப்பட்ட தண்டனையாக இந்த வெள்ளம் உள்ளது என்ற பேருண்மையை நாம் உணர வேண்டும். முதலில், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மக்களிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இலாப வெறிக்காக நீர்நிலைகளைக் கொன்றொழிக்கும் அதிகார, அரசியல் வர்க்கத்தினரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று சொல்லியிருப்பதுபோல, நம் மனித சமுதாயத்தைக் காயப்படுத்தும் வன்முறைகளின் பன்முகங்களை நாம் எதிர்கொள்ளும்போது சோர்வடையவோ வருத்தப்படவோ நம்மை அனுமதிக்கக் கூடாது. இரக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீதியின் பணிகளை நாம் ஆற்ற வேண்டும். தமிழகத்தின் நலன் காக்கும், தமிழர்களின் சந்ததி காக்கும் நிரந்தரத் தீர்வுக்கான போரை வீரியத்துடன் முன்னெடுக்க நாம் களம் இறங்க வேண்டும். எப்படி? அன்பு நெஞ்சங்களாகிய நீங்கள்தான் அதற்குத் தீர்வு. சென்னையில் கடும் வெள்ளத்திலும் உயிரைப் பணயம் வைத்து எத்தனையோ பேர், குறிப்பாக இளையோர் சக்தி களம் இறங்கி, சிறப்பான சீரிய பணியை ஆற்றியிருக்கிறது. தொடர்ந்து ஆற்றி வருகிறது. எனவே நம் பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. இழந்த இயற்கை வளங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். காடுகள் அழிவைத் தடுத்து மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு நாம் முயலா விட்டால் பேரழிவே மிஞ்சும். ஆனால் முயன்றால் அதில் கிடைப்பது முன்னேற்றமே. எனவே தோன்ற வேண்டும் மாற்றம் நம்மில். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெற்றியின் படியாக ஆற்றல் பெற வேண்டும். பாலைநிலம் வயலாகட்டும். நீர்வடிகால்கள் அமைக்கப்படட்டும், ஆக்ரமிப்புகள் அகற்றபடட்டும், நம் பூமி காக்க வீறு கொண்டு புறப்படுவோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.