2015-12-14 16:09:00

திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சிறிசேனா சந்திப்பு


டிச.14,2015. இலங்கையில் இடம்பெற்றுவரும் அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள் அந்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனா அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார்.

கடந்த சனவரியில் இலங்கைக்கு திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதப் பயண நிகழ்வுகளின் நினைவுகள், அந்நாட்டின் அண்மை வரலாற்றில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள், அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள், சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றி வரும் பணிகள், பல்சமய உரையாடலின் முக்கியத்துவம், பாரிசில் நடந்து முடிந்துள்ள காலநிலை மாற்றம் உலக மாநாட்டின் விளைவுகள் போன்ற தலைப்புகள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

இச்சந்திப்புகளில் பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.